பெங்களூரு உணவகங்களுக்கான வர்த்தக எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தத்தால் உணவகங்கள் மூடல்: பெங்களூரு உணவக சங்கம் அறிவிப்பு!!

பெங்களூரு:
மேற்காசியாவில் அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், வர்த்தக எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலை சீரடையாமல் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்தால் உணவகங்கள் இன்று முதல் மூடப்படும் சூழல் நிலவுவதாக பெங்களூரு உணவக சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கம் வெளியிட்டுள்ள கடிதத்தில், ‘பெங்களூரு உணவகங்களுக்கான வர்த்தக எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஹோட்டல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில் பிரிவு, மக்களுக்கான அடிப்படை தேவைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. இதனால் தங்களது அன்றாட உணவுக்கு உணவகங்களை நம்பியுள்ள மாணவர்கள், மூத்த குடிமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவர்.

இத்தகைய நிலையில் நிறுத்தப்பட்டுள்ள வர்த்தக எரிவாயு சிலிண்டர் விநியோகம் வழக்கம் போல சீரடையவில்லை என்றால் ஹோட்டல் தொழில் கடுமையாக பாதிக்கும்.

70 நாட்களுக்கு சிலிண்டர் விநியோகம் சீராகாது என எண்ணெய் நிறுவனங்கள் கொடுத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

அதனால் இந்த துறை சார்ந்த அமைச்சகம், அரசு, மக்கள் பிரதிநிதிகள் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ள காரணத்தால் இன்று (மார்ச் 10) முதல் பெங்களுருவில் உள்ள உணவகங்கள் மூடப்படும் சூழல் உள்ளது.

இதனால் இந்த தொழிலை நம்பியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்’ என பெங்களூரு உணவக சங்க தலைவர் பி.சி.ராவ் அதில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.60-ம், வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ரூ.114.50-ம் என விலை உயர்ந்தது. இந்நிலையில், பெங்களுருவில் வர்த்தக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கு என்ன காரணம்? – ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.

இதனால், வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது.

இதனால், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது.

இதுதவிர, எரிவாயுவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ‘கெயில்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்தது.

இந்த சூழலில் தட்டுப்பாடு காரணமாக உணவகங்களுக்கு சிலிண்டர் விநியோகம் பெங்களுருவில் நிறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *