3-வது முறையாக பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் ரயிலை இயக்கும் வாய்ப்பை பெற்ற தாமரைச்செல்வன்!!

மதுரை:
பிரதமர் மோடி இன்று (மார்ச் 11) தொடங்கிவைக்கும் ராமேசுவரம் – மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரையைச் சேர்ந்த லோகோ பைலட் தாமரைச்செல்வன் இயக்குகிறார். அவர் 3-வது முறையாக பிரதமர் தொடங்கி வைக்கும் ரயிலை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்

திருச்சியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தல், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார்.

இவ்விழாவில் நெல்லை – மங்களூரு, ராமேசுவரம்- மங்களூரு (வாராந்திரி ரயில்), நாகர்கோயில் – சாரளபள்ளி அம்ரித் பாரத், கோவை – தன்பாத் அம்ரித் பாரத் மற்றும் மயிலாடுதுறை – திருவாரூர்- காரைக்குடிக்கான பயணிகள் ரயில் என 5 புதிய ரயில்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

இதில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ராமேசுவரம் – மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரையைச் சேர்ந்த லோகோ பைலட் தாமரைச்செல்வன் இயக்குகிறார். இவர் மூன்றாவது முறையாக பிரதமர் தொடங்கி வைக்கும் ரயிலை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் என்பது சிறப்பு.

கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி பிரதமர் தொடங்கி வைத்த மதுரை- சென்னை தேஜஸ் அதிவிரைவு ரயிலை இவர் இயக்கினார்.

2025 ஏப்ரல் 6-ல் புதிதாக கட்டப்பட்ட பாம்பன் பாலம் வழியாக முதல் ரயிலை பிரதமர் தொடங்கிவைத்தபோது, அந்த ரயிலையும் இவர்தான் இயக்கினார். இன்று திருச்சி விழாவில் பிரதமர் தொடங்கிவைக்கும் ராமேஸ்வரம் – மங்களூரு புதிய விரைவு ரயிலையும் இவரே இயக்குகிறார்.

தாமரைச்செல்வன் 1994-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அன்றைய தென் மத்திய ரயில்வே ஹூப்ளி கோட்டத்தில் உதவி பைலட்டாக பணியில் சேர்ந்தார்.

தென்னக ரயில்வேயில் இருக்கும் மூத்த லோகோ பைலட்டுகளில் ஒரு சிலரில் இவரும் ஒருவர். லோகோ பைலட்டுகள் தங்களுடைய 30 ஆண்டு கால பணியில் சில ஆண்டுகள் அயல் பணிக்கு ( Deputation )செல்வதற்கான வாய்ப்பு உண்டு.

அயல் பணி என்றால் அலுவலகத்தில் கண்ட்ரோலராக பணிபுரிவது அல்லது ரயில் ஓட்டும் பணியை செய்யாமல் மற்ற அலுவலகப் பணியை செய்வது. ஆனால் தாமரை செல்வன் தன்னுடைய 32 ஆண்டு பணி காலத்தில் அயல் பணிக்கு செல்லாமல் பணிக்காலம் முழுவதும் ரயில் ஓட்டும் பணியை மட்டுமே செய்து வருகிறார்.

மேலும், இன்றைய தினம் அவருடைய வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நாள். அவரது பிறந்த நாள் இன்று (12.03.1966) அவர் தன்னுடைய 60 வது வயதினை நிறைவு செய்கிறார். மேலும், மார்ச் 31-ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இந்திய ரயில்வேயிலேயே மூன்று முறை புதிய ரயிலை இயக்கும் வாய்ப்பை பெற்ற லோகோ பைலட் யாருமில்லை என மதுரை கோட்ட ரயில் ஓட்டுநர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *