போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ, பதற்றம் கொள்ளவோ வேண்டாம் – முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!!

சென்னை:
“போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ, பதற்றம் கொள்ளவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மேற்காசியப் போர்ச்சூழல் காரணமாக, தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள, இரண்டு நாட்களுக்கு முன்பு உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டதோடு, சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு – பெட்ரோல் – டீசல் உள்ளிட்ட எரிபொருள் விநியோகம் குறித்து பிரதமருக்கும், தொடர்புடைய ஒன்றிய அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில், எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டமும் நேற்று நடைபெற்றுள்ளது.

இவ்விவகாரத்தில் ஒன்றிய அரசு மேலும் தீவிரமாகக் கவனம் செலுத்திட நாடாளுமன்ற வளாகத்திலும் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்.

போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்நேரத்தில் ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குத் துணை நின்று மேற்காசியப் போர்ச்சூழலை எதிர்கொள்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *