தமிழ்நாட்டில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மிக முக்கியமான ஒரு திட்டம் மகளிர் உரிமைத் தொகை திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இந்த மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு ரேஷன் கார்டு அவசியம். இதனால் நிறைய பெண்கள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கின்றனர்.
ரேஷன் கார்டில் நமக்கு அடிக்கடி அப்டேட் செய்ய வேண்டியிருக்கும். அதற்குக் காரணம் முகவரி மாற்றுவது, மொபைல் நம்பர் மாற்றுவது போன்ற விஷயங்கள் உள்ளன.
அதோடு, ரேஷன் கார்டில் உறுப்பினர் பெயர் நீக்குதல், பெயர் திருத்தம் செய்தல், புதிய உறுப்பினரைச் சேர்த்தல் போன்ற அப்டேட்களைச் செய்ய வேண்டியிருக்கும். இந்த அப்டேட்களை உடனே நீங்கள் செய்யாவிட்டால் ரேஷன் உதவிகள் கிடைக்காது.
ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்கள் சந்திக்கும் ரேஷன் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக ஒவ்வொரு மாதமும் மண்டல வாரியாக தமிழ்நாடு அரசு தரப்பில் சிறப்பு அப்டேட் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த முகாம்களில் ரேஷன் கார்டில் இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம். ரேஷன் தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வு பெறலாம்.
ரேஷன் கார்டு வைத்திருக்கும் பயனாளிகளுக்கான சிறப்பு அப்டேட் முகாம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த (அக்டோபர்) மாதத்துக்கான முகாம் நாளை (11ஆம் தேதி) நடைபெறுகிறது.
இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ரேஷன் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அக்டோபர் 11ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை மண்டல உதவி ஆணையர், வட்ட வழங்கல் அலுவலகங்களில் இந்த குறைதீர்ப்பு முகாம் நடத்தபடும் என்று உணவு வழங்கல் துறை அறிவித்துள்ளது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பொதுமக்கள் தங்களுடைய கார்டுகளில் அப்டேட் செய்யலாம். இந்த வாய்ப்புக்காக நிறையப் பேர் காத்திருந்த நிலையில் அதற்கான வாய்ப்பு வந்துவிட்டது.
தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் இந்த குறை தீர்ப்பு முகாம்களை ஒவ்வொரு மாதமும் தமிழக அரசு நடத்தி வருகிறது.
இந்த முகாம்களில் கலந்து கொள்ளும் ரேஷன் அட்டைதாரர்கள் தொடர்ந்து பயன்பெற்று வருகின்றனர். அவர்களின் பிரச்சினைகள் அரசு தரப்பில் தீர்க்கப்பட்டுள்ளன.
ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க அலைந்து திரிந்து சிரமப்பட முடியாமல் முதியோர்கள் தவிக்கின்றனர். அவர்களுக்கு அரசு தரப்பில் சிறப்பு அங்கீகாரச் சான்று வழங்கப்படுகிறது.
ரேஷன் கடைகளில் எப்போதுமே கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அவர்கள் வெகு நேரம் காத்துக் கிடக்க வேண்டிய சிரமம் இனி இருக்காது. அவர்களுக்கு இந்த அங்கீகாரச் சான்று உதவியாக இருக்கும்.