சமையல் எரிவாயு தீர்ந்துவிட்டால் நயினார் அண்ணனிடம் வாங்கிக் கொள்வேன் – சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு!!

சென்னை:
“சமையல் எரிவாயு தீர்ந்துவிட்டால் நயினார் அண்ணனிடம் வாங்கிக் கொள்வேன்” என்று சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு வேடிக்கையாகத் தெரிவித்தார்.

நேற்று திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 11 ஆண்டுகளில் எந்தவொரு ரயில்வே அமைச்சராவது ஒரு ரயிலை தொடங்கி வைத்திருக்கிறாரா.

வெளியுறவுத் துறை அமைச்சரோ, பாதுகாப்புத் துறை அமைச்சரோ சுயேச்சையாக ஏதாவது திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார்களா. அனைத்தும் பிரதமரின் பெயரிலேயே நடக்கிறது. இது தனிநபர் ஆட்சி போல உள்ளது.

பாஜக-வின் உண்மையான கூட்டணி என்பது அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை மற்றும் தற்போது புதிதாகச் சேர்ந்துள்ள தேர்தல் ஆணையம் ஆகியவையே. இவர்களை வைத்துக் கொண்டு தான் ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக அரசியல் செய்கிறது.

தமிழகம் இந்தியாவில் ஒரு பகுதியாக இருப்பதால், இங்கே நடந்த வளர்ச்சியைத் தாங்கள் செய்ததாக மத்திய அரசு விளம்பரம் செய்து கொள்கிறது.

வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 53 சதவீத வாக்குகளைப் பெறும். மீண்டும் மு.க.ஸ்டாலினின் ஆட்சி அமையும். இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “சமையல் எரிவாயு தீர்ந்துவிட்டால் நயினார் அண்ணனிடம் வாங்கிக் கொள்வேன்” என்று சிரித்தபடி அப்பாவு பதில் அளித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *