சென்னை:
பொங்கல் பரிசு தொகுப்பை சிறப்பாக வழங்கியதற்காக நியாய விலை கடை பணியாளர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கான ஊக்கத்தொகை ரூ. 3-ஆக உயர்த்தி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பு: இந்த ஆண்டு பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் தமிழகத்தில் உள்ள 2 கோடியே 22 லட்சத்து 91,710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு ஆகியவற்றுடன் ரூ.3 ஆயிரம் ரொக்கத்தொகை வழங்க முதல்வர் ஆணையிட்டார்.
அதன்படி, கடந்த ஜன.8 முதல் 24 வரை நியாயவிலைக்கடை பணியாளர்களால் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு சிறப்பாக வழங்கப்பட்டது.
பொங்கல் பரிசுத் தொகுப்பினை சிறந்த முறையில் வழங்கியதற்காக ரேஷன் கடைப் பணியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமையை ஈடுசெய்யும் விதமாக கடந்த காலங்களில் ஒரு குடும்ப அட்டைக்கு 50 பைசா வீதம் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் எவ்வித புகாருக்கும் இடமின்றி, செவ்வனே திட்டத்தை செயல்படுத்தியதாகவும் அவ்வகையில் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.3 என்ற வகையில் ஊக்கத் தொகை வழங்க முதல்வரை கேட்டுக் கொண்டனர்.
நியாய விலைக் கடை பணியாளர்களின் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து, 2026-பொங்கல் பரிசுத் தொகுப்பினை சிறந்த முறையில் வழங்கியதற்காக, நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு ஊக்க தொகையாக தலா ரூ.3 வழங்க ஆணையிட்டுள்ளார்.
மேலும் இதற்கு ஆகும் கூடுதல் செலவினம் ரூ.6,47,43,054-ஐ வழங்க நிருவாக அனுமதி அளித்துள்ளார்.
இதன் மூலம் நியாயவிலைக்கடை பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை முதல்வர் நிறைவேற்றி உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.