சென்னை:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் ஏப்.23-ம் தேதி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை விட வேண்டும் என்று தமிழக அரசுக்கு, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்.23-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 2.90 கோடி பெண், 2.78 கோடி ஆண், 7,656 திருநங்கைகள் என மொத்தம் 5.69 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள், அனைத்து கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு ஏப்.23-ம் தேதி சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை விட வேண்டும்.
தொழிலாளர் பணியாற்றும் தொகுதியில் தேர்தல் நடைபெறாவிட்டாலும், தேர்தல் நடைபெறும் தொகுதியில், அந்த தொழிலாளி வாக்காளராக இருந்தால் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்.
தினக்கூலி தொழிலாளராக இருந்தாலும் விடுப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.