சென்னை:
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெறும் ஆயத்தப் பணிகள் குறித்து, தேர்தல் பார்வையாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையருமான குமரகுருபரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பொது பார்வையாளர்கள், செலவின பார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தொகுதிவாரியான வாக்காளர்கள் எண்ணிக்கை, வாக்குப்பதிவு மையங்கள், பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்த ஆய்வு, நிலையான கண்காணிப்பு குழுக்கள், பறக்கும் படைகள், வீடியோ கண்காணிப்பு குழுக்களின் செயல்பாடுகள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருட்கள் குறித்த விவரங்கள்.
சி-விஜில் செயலி, சுவிதா செயலிகள் மூலம் பெறப்பட்ட புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், விவிபேட் இயந்திரங்களின் இருப்பு மற்றும் தயார் நிலை.
தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.