சென்னை
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆவேசமாகப் பேசினார்.
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியில் பாஜக சார்பில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த பயிலரங்கம் மற்றும் வழக்கறிஞர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, தேர்தல் பயிலரங்கத்தில் சிறப்புரையாற்றினார்.
அவர் பேசியதாவது: அருணாச்சல பிரதேசத்தில் பெரும்பாலும் பாஜக கட்சியே ஆட்சியை அமைத்து வருகிறது.அங்கே பாஜக பலமாக வளர்ந்து விட்டது.
நான் கல்லூரியில் படித்து வந்த காலங்களில் பாஜகவை இந்துத்துவா கட்சியென்றும் மதவாத கட்சியென்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி எனவும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் பொதுமக்களிடையே பெரும் அவதூறு பரப்பி வந்தனர்.
அருணாச்சல பிரதேசத்தில் கிராமம் கிராமமாக, வீடு வீடாக சென்று பாஜக சார்பில் நாங்கள் காங்கிரஸ் செய்த துரோகங்களை, ஊழல்களை எடுத்துரைத்தோம். தற்போது அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் முற்றிலுமாக இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அதைப் போன்று தமிழகத்தில் பாஜகவினர் செயல்பட வேண்டும். திமுக செய்த தவறுகளையும் ஊழல்களையும் வீடு வீடாகச் சென்று மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரசை ஒழித்தது போன்று தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.
மொழி அரசியலை திமுக கையில் எடுத்து மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு பழிகளை சுமத்தி வருகிறது. திமுக அரசு ஊழல் செய்வதில் முதன்மையாக உள்ளது.
தமிழகத்தை பொருத்தவரை கலாச்சாரம், உணவு முறை, தமிழர்களின் வாழ்வுமுறை மிகவும் பிடித்துள்ளது.
கல்வியிலும் எல்லாத் துறைகளிலும் எங்கு சென்றாலும் தமிழர்கள் தனி முத்திரை பதித்து வருகின்றனர். எங்கும் எதிலும் முதன்மையாக தமிழர்கள் இருப்பதை பார்ப்பதற்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது.
தமிழகத்தின் முதன்மையான தமிழ்மறை திருக்குறள். பிரதமர் நரேந்திர மோடிக்கு திருக்குறள் மிகவும் பிடிக்கும்.
தனது பல்வேறு உரைகளிலும் திருக்குறளை அவர் மேற்கோள் காட்டிப் பேசுவார். தமிழக மக்களை திமுக வஞ்சித்து வருகிறது. தேர்தலில் திமுக தோற்கடிக்கப்பட வேண்டும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி மீதும் பிரதமர் மோடி மீதும் தமிழக மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.