புதுடெல்லி:
வரும் ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிக்காக ரிஷப் பந்த் 3-வது வீரராக களமிறங்கப் போவதாக தெரியவந்துள்ளது.
2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் வரும் 28-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்தப் போட்டிக்காக எல்எஸ்ஜி அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
2025-ம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் எல்எஸ்ஜி அணிக்காக ரூ.27 கோடிக்கு ரிஷப் பந்த் எடுக்கப்பட்டிருந்தார்.
இதனால் அவர் மீது ஏராளமான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால், கடந்த சீசனில் அவர் எதிர்பார்த்த அளவுக்கு பிரகாசிக்கவில்லை.
இதன் காரணமாக இந்த சீசனில் எல்எஸ்ஜி அணிக்காக அவர் 3-வது இடத்தில் இறங்கி விளையாடப் போவதாகத் தெரியவந்துள்ளது. அவர் இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 4-வது வீரராகவே களமிறங்கி வந்தார்.
இதையடுத்து 3-வது வீரராக களமிறங்கும் லக்னோ அணி வீரர் நிக்கோலஸ் பூரன் 4-வது வீரராக விளையாடுவார் எனத் தெரிகிறது.
தற்போது லக்னோ அணி சென்னையில் முகாமிட்டு பயிற்சி செய்து வருகிறது. வரும் ஏப்ரல் 1-ம் தேதி தனது முதல் ஆட்டத்தில் லக்னோ அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.
எல்எஸ்ஜி அணியின் தொடக்க வீரர்களாக எய்டன் மார்க்ரமும், மிட்செல் மார்ஷும் களமிறங்குவர். அதைத் தொடர்ந்து ரிஷப் பந்த், நிக்கோலஸ் பூரன் ஆகியோர் களத்துக்கு வருவர் என லக்னோ அணி வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 2025-ம் சீசனில் அவர் 133.17 ஸ்டிரைக் ரேட்டில் 269 ரன்கள் எடுத்திருந்தார் ரிஷப் பந்த். இதில் ஒரு சதமும் அடித்திருந்தார்.
ஆனால், அவரிடமிருந்து போதுமான மட்டை வீச்சு வெளிப்படவில்லை என எல்எஸ்ஜி அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது.
நிக்கோலஸ் பூரனைத் தொடர்ந்து ஆயுஷ் பதோனி, அப்துல் சமத், ஷபாஸ் அகமது ஆகியோர் நடுவரிசையில் களமிறங்குவர். அதேநேரத்தில் லக்னோ அணியின் பந்துவீச்சிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அணி வீரர்கள் மயங்க் யாதவ், மோசின் கான் ஆகியோர் காயம் காரணமாக பயிற்சியில் ஈடுபடவில்லை. அவேஷ் கான், அன்ரிச் நோர்க்கியாவும் காயம் காரணமாக அவதிப்படுகின்றனர்.
இதுதொடர்பாக லக்னோ வட்டாரங்கள் கூறும்போது, “லக்னோ அணியின் பேட்டிங் வரிசை நன்றாக உள்ளது.
ஆனால் பந்துவீச்சாளர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். காயம் காரணமாக சிகிச்சை முடிந்து திரும்பியுள்ள மயங்க் யாதவ், வலைப் பயிற்சியில் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பார்க்கவேண்டும்.
அதைப் போலவே மற்ற பந்துவீச்சாளர்களுக்கு போட்டிக்கு முன்னதாக குணமாகி விடுவர் என எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தன.