பாஜக கூட்டணியில் இணையும் கட்சிகள், மூழ்கும் கப்பலில் ஏறுவதற்குச் சமம் – செல்வப் பெருந்தகை சொல்கிறார்!!

சென்னை:
தமிழகத்தில் நடக்கும் அனைத்து பிரச்சினைகள் தொடர்பாகவும் தமிழக காங்கிரஸ் சட்டப் பேரவையிலும், மக்கள் மன்றத்திலும் கண்டித்து வருகிறது. தமிழக அரசைக் கண்டித்து எதற்காக போராட்டம் நடத்த வேண்டும்? எல்லாவற்றுக்கும் போராட்டமே தீர்வாகிவிடாது.

கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காத பட்சத்தில்தான் போராட்டக்களத்தை நோக்கி நகர வேண்டும்.

தூத்துக்குடி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதியளித்த பிறகு, நான் போராட்டம் நடத்தினால் அதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்?

யாரோ சொல்வது போல் எல்லாம் எங்களால் இயங்க முடியாது. 140 ஆண்டு காலப் பாரம்பரியம் கொண்ட பேரியக்கம் காங்கிரஸ். எனவே, எப்போது போராட வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்.

எங்களிடம், ‘இதைச் செய்யவில்லையா, அதைச் செய்யவில்லையா’ எனக் கேள்வி எழுப்ப வேண்டிய அவசியமில்லை. பழனிசாமி அல்லது அண்ணாமலை போல எங்களுக்கு பேசத் தெரியாது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும்.

2014-ல் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த மோடிக்கு, 2019-ல் சரிவு தொடங்கியது. 2024-ல் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்றார்கள். ஆனால், தனிப் பெரும்பான்மை கூட அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியோரது ஆதரவு இல்லையென்றால் அந்த ஆட்சி கீழே விழுந்துவிடும். எனவே, பாஜக தங்களைச் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

பாஜக கூட்டணியில் இணையும் கட்சிகள், மூழ்கும் கப்பலில் ஏறுவதற்குச் சமம். தமிழக மக்கள் ஒருபோதும் பாஜக-வை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; ஏனெனில் அது தமிழ் மண்ணுக்கு எதிரான கட்சி.

தேர்தல் வரும் மாநிலங்களுக்கு மட்டுமே பட்ஜெட்டில் திட்டங்களை அறிவிப்பார்கள். ஆனால், தமிழகத்திற்கு அத்தகைய திட்டங்களைக் கூட அவர்கள் அறிவிக்கவில்லை.

தமிழகத்தில் தோற்றுவிடுவோம் என்பதால் தான் ஆளுநர் ரவியை மேற்கு வங்கத்தில் போய் தொந்தரவு செய்யுங்கள் என அனுப்பிவிட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *