தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வென்று எடப்பாடி பழனிசாமி முதல்வராவார் – எஸ்.பி.வேலுமணி!!

கோவை:
“தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வென்று எடப்பாடி பழனிசாமி முதல்வராவார்” என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின் முதன்முறையாக கோவை வந்த, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு இன்று கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவரை, கோவை மாவட்டத்தின் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி, “எடப்பாடி பழனிசாமி வெற்றிகரமான, வலுவான கூட்டணியை அமைத்து கோவை, திருப்பூர், நீலகிரி உட்பட அனைத்து மாவட்டங்களுக்கும் அதிமுக வேட்பாளர்களை அறிவித்துவிட்டார்.

கோவை மாவட்டம் என்றைக்குமே அதிமுகவின் கோட்டை. 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோவை ஜெயலலிதாவின் ஆட்சியிலும், இபிஎஸ்சின் ஆட்சியிலும் வளர்ச்சியடைந்தது.

அதிமுக ஆட்சியில் கேட்ட திட்டங்களெல்லாம் கோவைக்கு வழங்கப்பட்டது. இதனால் கோவை மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தது. கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் கோவைக்கு எந்த திட்டங்களும் வழங்கப்படவில்லை.

அவிநாசி உட்பட கோவையின் 11 தொகுதிகளிலும், திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி முழுமையாக வெற்றிபெறும். தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வென்று எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவார்.

மீண்டும் அதிமுக ஆட்சியமைந்ததும், இன்னும் விடுபட்ட திட்டங்களையெல்லாம் கோவைக்கு கொண்டுவருவோம்.

திமுக ஆட்சியில் அனைத்து வரியும் உயர்த்தப்பட்டுள்ளது, இதனை மக்கள் அனைவரும் உணர்ந்துள்ளனர்.

அதனால் அதிமுக கூட்டணி நிச்சயம் மிகப்பெரிய வெற்றிபெறும். நாங்கள் மக்களுக்கு கொடுத்துள்ள திட்டங்களை சொல்லி வாக்குகளை கேட்போம்” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *