சென்னை:
விஜய் பிரச்சார விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து அறிக்கை தர தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்தியுள்ள தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரே மாதிரியான பாதுகாப்பு வழங்க டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நேற்று முன்தினம் தவெக தலைவர் விஜய், தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்துவிட்டு, அங்கிருந்து பிரச்சாரத்தை தொடங்கினார்.
நான்கு இடங்களில் பிரச்சாரத்துக்கு அனுமதி கோரியிருந்த நிலையில், பெரம்பூர் மற்றும் கொளத்தூரில் பேசிய விஜய், வில்லிவாக்கம், அண்ணாநகரில் பேசாமல் வீடு திரும்பினார்.
கொளத்தூர் தொகுதியில் போலீஸார் அமைத்திருந்த தடுப்பைத் தாண்டி தவெக-வினர் முன்னேறி சென்றதால், தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதில் சிலர் கீழே விழுந்தனர். இதனால், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் தவெக தரப்பில் புகார் தெரவிக்கப்பட்டது. இதையடுத்தே விஜய் வில்லிவாக்கம், அண்ணாநகர் பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டுச் சென்றார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது:
பெரம்பூர் பிரச்சாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து அறிக்கை அளிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேசமயம், அனைவருக்கும் ஒரே மாதிரியாக பாதுகாப்பு வழங்கும்படி டிஜிபிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ரோடு ஷோவைப் பொறுத்தவரை, அதற்கான அனுமதி தொடர்பாக, அரசு வெளியிட்ட அரசாணை தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்களுக்கு வேட்பு மனுவை பூர்த்தி செய்வதில் பிரச்சினை இருக்கக்கூடாது என்பதற்காக அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்பாளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அதிக விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில், அவை பரிசீலிக்கப்பட்டு வரும் ஏப்.6-ம் தேதி வெளியாகும் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்படும்.
தமிழகத்தில் இதுவரை 15 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு பொதுச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
பதற்றமான வாக்குச்சாவடிகள் தொடர்பாக தேர்தல் பார்வையாளர்களுடன் இணைந்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து தகவல் அளிப்பார்கள்.
வேட்பு மனுபரிசீலனையின் போது, வேட்பாளர் உட்பட 4 பேர் அனுமதிக்கப்படுவர்கள். வேட்பாளருக்கு பதில் அவரது முகவரும் பங்கேற்கலாம்.
தேர்தல் பார்வையாளர் முன்னிலையில், தாக்கல் செய்த வரிசை அடிப்படையில் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.