சென்னை:
சென்னையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிக்கின. ஒரத்தநாடு திமுக வேட்பாளர் வைத்திலிங்கம் படத்துடன் கூடிய விசிட்டிங் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை அண்ணாநகர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அரும்பாக்கம் 100 அடி சாலையில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்றை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அதில் 100 டம்மி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) இருந்தது தெரியவந்தது.
மேலும் திமுக ஒரத்தநாடு சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் வைத்தியலிங்கத்தின் புகைப்படங்கள் அடங்கிய விசிட்டிங் கார்டுகள் கொண்ட 5 பார்சல்கள் இருந்தன.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தேர்தல் பறக்கும் படையினர் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவற்றை அண்ணாநகர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர்.
விசாரணையில் பார்சல் கொண்டு சென்ற நபர் சேலத்தைச் சேர்ந்த செல்வம் என்பதும், ஆட்டோ ஓட்டி வந்தவர் அண்ணா நகரைச் சேர்ந்த கணேசன் என்பதும் தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட டம்மி இவிஎம் இயந்திரங்களை தனியார் பேருந்து மூலம் ஒரத்தநாடு சட்டப்பேரவை தொகுதிக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டு இருந்ததும், வாக்கு சேகரிப்பின்போது வைத்திலிங்கம் புகைப்படம் ஒட்டிய இந்த டம்மி மிஷினை காண்பித்து வாக்கு சேகரிக்க திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது.
இந்த விவகாரம் ஒரத்தநாடு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்டது என்பதால் அந்த தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.