சென்னை:
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மதுரை மாநகராட்சியில் விதிகளை மீறிய வரிக் குறைப்பு முறைகேட்டின் மூலம் சுமார் 200 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக அதிகாரிகள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் லட்சக்கணக்கான தனியார் கட்டிடங்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக சட்ட விரோதமாக வரிக்குறைப்பு செய்ததில் மாநகராட்சி உயர் அதிகாரிகள், மண்டலத்தலைவர்கள், கவுன்சிலர்கள் உட்பட பலருக்கும் தொடர்பிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
எனவே, மதுரை மாநகராட்சியில் வரிக்குறைப்பு முறைகேடு புகாரில் கைதாகி உள்ள நபர்களிடம் விரிவான விசாரணை நடத்தி வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்வதோடு, மற்ற மாநகராட்சிகளிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.