சென்னை:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.52.33 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள், பணம் சிக்கியது.
சென்னை ரயில்வே கோட்ட முதுநிலை கோட்ட பாதுகாப்பு ஆணையர் வல்லேஸ்வர பாபுஜி உத்தரவின் பேரில், சென்ட்ரல் ஆர்பிஎஃப் காவல் ஆய்வாளர் மதுசூதனரெட்டி மேற்பார்வையில் ஆர்பிஎஃப் போலீஸார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் ஆகியோர் நேற்று மதியம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கோயம்புத்தூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு விரைவு ரயில் வந்தது. அதில் இறங்கி வந்த பயணிகளில், ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
அவரை தடுத்து நிறுத்தி, அவரது பைகளை சோதித்தபோது, அதில் ரூ.44,83,257 மதிப்பிலான 4 தங்ககட்டிகள் மற்றும் ரூ.7.50 லட்சம் ரொக்கம் இருந்தது.
இதற்கான ஆவணங்களை அவர் சமர்ப்பிக்கவில்லை. இதுகுறித்து விசாரித்த போது, அந்தநபர் சேலத்தைச் சேர்ந்த பத்மநாபன் ஜெயராஜ் (43) என்பதும், வியாபாரத்துக்காக தங்கக் கட்டிகள், பணத்தை எடுத்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, தங்கம், ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, மேல்நடவடிக்கைக்காக, தங்ககட்டிகள், பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.