கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசைக் கண்டித்து, சிலந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணை கட்டுமானத்தை நிறுத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணை கட்டுமானத்தை நிறுத்த வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுத்தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பை மீறி, கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு, இடுக்கி மாவட்டம், தேவிகுளம் தாலுகாவில் உள்ள பெருகுடா என்ற இடத்தில், சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டிக் கொண்டிருக்கிறது. இதனால், அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, தமிழக விவசாயிகள் பெரிதளவில் பாதிப்புக்குள்ளாவார்கள். ஆனால், தமிழக விவசாயிகளைக் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறது திமுக அரசு.

ஒரு புறம், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, மேகதாது அணையை நிச்சயம் கட்டுவோம் என்று கூறியதையும், முதலமைச்சர் ஸ்டாலின் கண்டிக்கவில்லை. பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில அரசு தடுப்பணை கட்டுவதையும் தடுக்கவில்லை. தங்கள் சந்தர்ப்பவாத இந்தி கூட்டணியின் நலனுக்காக, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனையும், உரிமைகளையும் அடகு வைக்க, திமுக எப்போதும் தயங்கியதே இல்லை.

ஒவ்வொரு ஆண்டும், காவிரி நீர் மற்றும் மழை நீர் அனைத்தும் தடுப்பணை இன்றி கடலில் கலந்து வீணாகிக் கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்தவுடன், 1,000 தடுப்பணைகள் கட்டுவோம் என்று வெற்று வாக்குறுதி கொடுத்த திமுக, கடந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில், ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லை. உண்மையில், கோபாலபுரக் குடும்பத்தின் நலனைத் தவிர, பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து எந்தச் சிந்தனையும் இல்லாமல் இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

உடனடியாக, கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசைக் கண்டித்து, சிலந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணை கட்டுமானத்தை நிறுத்த வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *