குடும்பத்தின் பெயரை பிராண்ட் ஆக வைத்துக்கொண்டு நான் இங்கு தேர்தலில் நிற்கவில்லை – அதிமுக கூட்டணி வேட்பாளர் சுந்தர்.சி!!

மதுரை:
குடும்பத்தின் பெயரை பிராண்ட் ஆக வைத்துக்கொண்டு நான் இங்கு தேர்தலில் நிற்கவில்லை. என்று மதுரை மத்திய தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் சுந்தர்.சி தெரிவித்தார்.

மதுரை தைக்கால் தெரு, அனுமார் கோவில் படித்துறை, பொன்னகரம் உள்ளிட்ட இடங்களில் அதிமுக கூட்டணியின் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் சுந்தர்.சி பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், பழநியில் என் பாட்டி இட்லி விற்று 4 பசங்களை வளர்த்தார்.

அப்படி வளர்க்கப்பட்டு அரசாங்க வேலைக்கு சென்றவர்தான் என் அப்பா. சராசரி குடும்பத்தில் பிறந்து தனி மனிதனாக சென்னை சென்று சினிமா துறையில் போராடி இந்த நிலைக்கு வந்துள்ளேன்.

சுந்தர்.சி என்ற என் பெயரை சொன்னால் தமிழகத்துக்கு ஓரளவு தெரியும் அளவுக்கு பிராண்ட் ஆக உருவாகியுள்ளேன்.

இது எனது தனிப்பட்ட உழைப்பு. குடும்பப் பெயரை வைத்துக் கொண்டு 25 ஆண்டுகள் அமெரிக்காவிலும், லண்டனிலும் படித்து குடும்பத்தின் பெயரை சொல்லி மட்டுமே எம்எல்ஏ சீட் பெற்று இங்கே வந்து தேர்தலில் நிற்கவில்லை.

ஒரு வெளிநாட்டுக்காரனாக நான் தேர்தலில் இல்லை. குடும்பத்தின் பெயரை பிராண்ட் ஆக வைத்துக்கொண்டு நான் இங்கு தேர்தலில் நிற்கவில்லை.

பழனிவேல் தியாகராஜனுக்கு அவரது பெயருக்கு முன்னால் இனிஷியலை போட்டால்தான் அவரை யார் என்று தெரியும்.

அவரது பிராண்ட் ஜீரோ. அந்த குடும்பத்தில் உள்ள முன்னோர்கள் பண்பாளர்கள்.

மிகப்பெரிய நல்ல காரியங்களை செய்துள்ளனர். நான் அவர்களைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

அப்படி பெரிய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் இப்படியா பேசுவார்கள்.

அவரது இந்த பேச்சால், தோல்விக்கான முதல் படியில் அவரும், வெற்றிக்கான முதல் படியில் நானும் நிற்கிறேன் என்பதுதான் உண்மை.

மக்கள் அவரது வீட்டுக்குச் சென்று குறைகளை சொல்ல முடியுமா? ஒரு அமைச்சர், மெட்ரோ, மேம்பாலம், குடிநீர் திட்டம் போன்ற திட்டங்களை தன்னுடைய சாதனைகளாக சொல்லவேண்டும். அப்படி இவர் என்ன செய்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *