காரைக்குடி:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மிக எளிதாக வெற்றி பெறும் என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காரைக்குடியில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம், “தமிழகத்தில் தற்போதைய தேர்தல் உட்பட கடந்த 4 தேர்தல்களில் திமுக தலைமையிலான கூட்டணி சோதிக்கப்பட்டுள்ளது.
இந்த 4 தேர்தல்களிலும் இந்தக் கூட்டணி மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரு கூட்டணியாக உள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றோம்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றோம். 2024 மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெற்றோம்.
இந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி மிக எளிதாக வெற்றி பெறும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என தெரிவித்தார்.
மகளிருக்கான இட ஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதாவை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் மக்களவையில் தோற்டித்ததன் மூலம், மகளிருக்கான 33% இட ஒதுக்கீட்டை தடுத்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி இருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ப. சிதம்பரம், “அறியாமையின் காரணமாகவே அவர் அத்தகைய கருத்தை தெரிவித்துள்ளார்.
அது முற்றிலும் தவறான கருத்து. அது ஒரு அப்பட்டமான பொய். பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா ஏற்கெனவே அரசியலமைப்பின் ஒரு பகுதியாக நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இதற்கான 106-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே மக்களவை மற்றம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது.
அது இப்போது அரசியலமைப்பின் ஓர் அங்கமாகவே உள்ளது. அரசியலமைப்புச் சட்டம் அனைத்து மாநில மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் சரத்து 344A-வை அறிமுகப்படுத்திய அந்த 106-வது அரசியலமைப்பு திருத்த மசோதாவையாவது அவர் படித்துப் பார்க்க வேண்டும்.
அவர் கூறுவது முற்றிலும் தவறு. ஆனால், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கவில்லை என்று அவர் தொடர்ந்து கூறுவாரானால் அது ஒரு அப்பட்டமான பொய்.
106வது அரசியலமைப்புத் திருத்தத்தை பிரதமர் அறிமுகப்படுத்தினார். நாங்கள் அதை நிறைவேற்றினோம். அது இப்போது அரசியலமைப்பின் ஒரு பகுதியாக உள்ளது.
அவர் இப்போது 344A பிரிவை இல்லை என்கிறாரா? அவர் ஏன் இந்த பிரிவை வாசித்துவிட்டு பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்ற வில்லை? அவர் 344A பிரிவை வாசிப்பதும் இல்லை; அதை குறிப்பிடுவதும் இல்லை.
தற்போதுள்ள 543 தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று அந்த பிரிவு தெளிவாகக் கூறுகிறது.
அதாவது 181 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவர் இதை உடனடியாக அமல்படுத்த முடியும். இந்த மாநில தேர்தலில் இல்லாவிட்டாலும் 2029-ம் ஆண்டில் அவர் இதை உடனடியாக அமல்படுத்த முடியும்” என தெரிவித்தார்.
பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் தமிழ்நாட்டுக்குள் ஊடுருவ முயல்வதாக ராகுல் காந்தி கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ப. சிதம்பரம், “தமிழ்நாட்டின் கதவுகள் பாஜகவுக்கு எதிராக உறுதியாக மூடப்பட்டுள்ளன.
பாஜக என்பது தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம், தமிழ் வரலாறு, தமிழ் மரபு, தமிழர்களின் அன்றாட நடைமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது.
தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த முறையும்கூட பாஜக தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது” என தெரிவித்தார்.