சென்னை;
டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு முறைக்கேடுகள் மூலமாக ரூ.1,000 கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படாத பணம் புழங்க வாய்ப்புள்ளதாகவும் அமலாக்கத்துறை அண்மையில் தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு எதிர்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்திருந்த நிலையில் தமிழ்நாடு பாஜக சார்பாக இன்று டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான எழும்பூரில் உள்ள நடராஜன் தாளமுத்து மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக இன்று காலை முதலே பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக நிர்வாகிகள் வினோஜ் பி செல்வம் ஆகியோரை அவரவர் இல்லத்திலேயே கைது செய்த போலீசார், பாஜக மாநிலத் துணைத் தலைவர்கள் கரு நாகராஜன், சக்கரவர்த்தி, வி.பி.துரைசாமி உள்ளிட்டோருடன் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்திற்கு டாஸ்மாக் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க வந்த ஏராளமான பாஜக தொண்டர்களை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.
இந்நிலையில், டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை, பனையூரில் உள்ள தனது இல்லத்தில் கருப்பு நிற சட்டை அணிந்து புறப்பட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை, அக்கறை சந்திப்பை அடுத்து காத்திருந்த போலீசார் அவரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.
இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “அமலாக்க துறையின் ஆரம்பகால தகவலின் அடிப்படையில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
பொறுத்திருந்து பாருங்கள்… இது தமிழ்நாட்டு அரசியலை உலுக்குவது மட்டுமல்ல, தமிழ்நாட்டின் நல்ல அரசியலை கொண்டு வருவதற்கான பாஜக எடுத்த முன்னெடுப்புக்கு இந்த போராட்டம் ஒரு அச்சாணியாக இருக்கும்.
டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி மட்டும் அல்ல 40 ஆயிரம் கோடி முறைகேடு நடந்திருக்கும் என்பது எனது அனுமானம், மொத்த மது விற்பனையும் சேர்த்து 40,000 கோடியை தாண்டும்.
ஆயிரம் கோடி என்பது சின்ன துரும்பு தான். 2024ல் நடந்த லோக்சபா தேர்தலே இந்தப் பணத்தில் தான் நடத்தி இருக்கிறார்கள்.
2026 தேர்தலையும் டாஸ்மாக் மூலம் கிடைத்த பணத்தில் தான் நடத்த திட்டமிட்டுள்ளார்கள். செந்தில் பாலாஜி உத்தமரா முதலில்? இந்தியாவில் No 1 Fraud politician செந்தில் பாலாஜி. காந்தியவாதி போல் வேடமிடுகின்றனர்.
தலை முதல் கால் வரை ஊழல் ஆட்சி நடைபெறும் திமுக அமைச்சரவையில் உள்ளவர் செந்தில் பாலாஜி. டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முதல் குற்றவாளி முதல்வர் மு.க.ஸ்டாலின், இரண்டாவது குற்றவாளி தான் செந்தில் பாலாஜி, ஏனென்றால் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பர் ஒன் குற்றவாளியாக இருந்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை தன்னுடைய அறிக்கையை முழுமையாக தாக்கல் செய்து முடிக்கும் பொழுது முதலமைச்சர் ஸ்டாலின் முதல் குற்றவாளியாக இருப்பார் என்பது என்னுடைய ஆணித்தரமான நம்பிக்கை” என்று தெரிவித்தார்.