பிரதமர் மோடி கொண்டு வந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா நகலை, முதல்வர் ஸ்டாலின் எரித்தது, பெண்கள் மீதான அவரது வன்மத்தை காட்டுகிறது – முதல்வர் ஸ்டாலின் மீது அன்புமணி சாடல்!!

சேலம்:
“பிரதமர் மோடி கொண்டு வந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா நகலை, முதல்வர் ஸ்டாலின் எரித்தது, பெண்கள் மீதான அவரது வன்மத்தை காட்டுகிறது” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார்.

இந்தக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியது: ”தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. அமெரிக்காவில் கிடைக்கக் கூடிய அத்தனை போதை மருந்துகளும் தமிழ்நாட்டில் தாராளமாக கிடைக்கின்றன.

இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தை அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆட்சி செய்தபோது ஒரு குழந்தை கூட வன்கொடுமைக்கு ஆளானது இல்லை.

ஆனால் திமுக ஆட்சியில் பச்சிளம் குழந்தைகளும் பெண்களும் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

திமுகவின் கடந்த 5 ஆண்டு ஆட்சியில், 369 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டனர்.

ஐந்து ஆண்டில் 2,100 பெண்கள் வன்கொடுமை கொலை செய்யப்பட்டனர்.

ஐந்தாணடில் 8,700 பேர் கொலை நடந்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு 62 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் போக்சோ வழக்குகள் மட்டும் 27 ஆயிரம்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக 44 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 3,280 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால் இது எதுவுமே முதல்வருக்கு தெரியாது. அவர், விளம்பரப் படத்தில் நடித்துவிட்டு சென்றுவிடுவார்.

எனவே பெண்களுக்கு, விவசாயிகளுக்கு பாதுகாப்பு கிடைக்க, நல்லாட்சி நடந்திட ஒரு விவசாயியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தேர்ந்தெடுங்கள்.

பெண்களின் முன்னேற்றத்துக்காக, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை பிரதமர் மோடி கொண்டு வந்தார்.

ஆனால் அந்த மசோதாவை முதல்வர் ஸ்டாலின் எதிர்த்து, சட்ட நகலை எரித்தார். இது பெண்களுக்கு எதிரான அவரது வன்மத்தை காட்டுகிறது.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தால் தமிழகத்தில் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 351ஆக அதிகரித்திருக்கும்.

அதில் 117 பெண்கள் எம்எல்ஏவாக ஆக வாய்ப்பு கிடைத்திருக்கும். எம்பிக்கள் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்து, அதில் 20 பெண்கள் எம்.பி.க்களாக வாய்ப்பு கிடைத்திருக்கும்.

பெண்கள் படிக்கக் கூடாதா? எம்எல்ஏ., எம்பி., ஆகக் கூடாதா ? ஆட்சி அதிகாரத்துக்கு வரக்கூடாதா? அவரது தங்கை மட்டும் தான் எம்.பி. ஆக வேண்டுமா?

தமிழகத்தில் பதிவாகியுள்ள தபால் ஓட்டுக்களில் 90% அதிமுகவுக்கு ஆதரவாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இது அரசு ஊழியர்கள் திமுக அரசுக்கு எதிராக இருப்பதை உணர்த்துகிறது.

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் 238 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியின்போது தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரியில் கொண்டுவரப்பட்டன ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட கொண்டு வரப்படவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியின்போது, பாமகவின் 30 ஆண்டு கால கோரிக்கையான மேட்டூர் உபரி நீர் திட்டம் முதல் கட்டமாக செயல்பாட்டுக்கு வந்தது.

அத்திக் கடவு அவினாசி திட்டம் கொண்டுவரப்பட்டது, காவிரி குண்டாறு திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை.

தமிழகத்தில் ஒரு நீர்ப்பாசன திட்டம் கூட புதிதாக செயல்படுத்தப்படவில்லை. எனவே, மக்கள் விரோத திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

இரண்டு வாரத்தில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி வருவார். தமிழகத்தில் நல்லாட்சி மலரும்” என்று அன்புமணி கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *