டெல்லியை 47 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஹைதராபாத்!!

ஹைதராபாத்:
ஐபிஎல் 2026 தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

உப்பலில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

ஹைதராபாத் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ஆரம்பம் முதலே டெல்லி பந்துவீச்சை சிதறடித்தார்.

வெறும் 47 பந்துகளில் சதம் கடந்த அவர், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 68 பந்துகளில் 135 ரன்கள் (10 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள்) குவித்து மிரட்டினார்.

டிராவிஸ் ஹெட் (37) மற்றும் இஷான் கிஷன் (25) ஆகியோர் அவருக்குத் துணையாக ஆட, இறுதியில் ஹென்ரிச் கிளாசன் அதிரடியாக 13 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்தார்.

இதனால் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் என்ற இலக்கை எட்டியது.

243 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு, நிதீஷ் ராணா (57) மற்றும் கேஎல் ராகுல் (48) ஜோடி ஓரளவுக்கு நம்பிக்கையளித்தது. ஆனால், மிடில் ஆர்டரில் டேவிட் மில்லர் (0) மற்றும் டிரைஸ்டன் ஸ்டப்ஸ் ஏமாற்றம் அளித்தனர்.

ஹைதராபாத் பவுலர்கள் ஈஷான் மலிங்கா தனது துல்லியமான யார்க்கர்களால் டெல்லி வீரர்களை நிலைகுலையச் செய்தார்.

அவர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றியை எளிதாக்கினார். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வியைத் தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

குறிப்பாக, அபிஷேக் சர்மாவின் இந்த மெகா சதம் மற்றும் ஈஷான் மலிங்காவின் பந்துவீச்சு அணியின் பலத்தை பறைசாற்றியுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *