புதுடெல்லி:
ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவும் ஈரானும் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், வரும் 30-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள இந்திய தூதரகத் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து விளக்க உரை நிகழ்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த பிப்.28-ம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின.
இதையடுத்து, இஸ்ரேலுக்கு எதிராகவும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகளை குறிவைத்தும் ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியது.
இரு தரப்புக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில், பாகிஸ்தானின் தலையீடு காரணமாக கடந்த 8-ம் தேதி இரு வாரங்களுக்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.
எனினும், அது பலனளிக்காத நிலையில், போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக கடந்த 22-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.
மேலும், ஈரான் துறைமுகங்களையும் ஹார்முஸ் ஜலசந்தியையும் அமெரிக்க கடற்படை முடக்கியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் அந்த நாடு உடன்பாடு மேற்கொள்ளும் வரை முடக்கம் தொடரும் என்று அறிவித்தார்.
ஈரான் மற்றும் அமெரிக்காவின் நடவடிக்கைகளால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் வெளியேறுவதோ உள்ளே செல்வதோ முடியாத நிலை உள்ளது.
இந்திய துறைமுகங்களுக்கு வர வேண்டிய 14 கப்பல்கள் தற்போது ஹார்முஸ் ஜலசந்திக்கு உள்ளே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இதனால், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏப்ரல் 28 முதல் 30 வரை மூன்று நாட்களுக்கு இந்திய தூதரக தலைவர்கள் மாநாடு புதுடெல்லியில் நடைபெற உள்ளது.
இதில், பல்வேறு நாடுகளில் இந்திய தூதர்களாக செயல்பட்டு வருபவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இந்த மாநாட்டின் முதல் நாள், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தலைமையில் நடைபெற உள்ளது.
இதில், மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடி மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்காவும் ஈரானும் முற்றுகையிட்டு உள்ளதால் ஏற்படும் கடுமையான பொருளாதார பின்விளைவுகள் ஆகியவை குறித்து விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளிக்க உள்ளார்.
இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றின் நிலைப்பாடுகள் குறித்தும் அவர் விளக்கம் அளிக்க உள்ளார்.
இரண்டாம் நாள் மாநாட்டில், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உரையாற்ற உள்ளார்.
மேற்காசிய போர், உக்ரைன் போர், வளர்ந்து வரும் சீன ஆதிக்கம், புதிய உலகளாவிய சமநிலை ஆகியவை குறித்து இந்திய தூதர்களுக்கு ஜெய்சங்கர் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளார்.
அவரைத் தொடர்ந்து இந்திய பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.
அவர், இந்திய ராணுவத்தின் திறன் மற்றும் ராணுவ கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் குறித்து தூதரக தலைவர்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளார்.
இந்த மாநாட்டில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் உரை நிகழ்த்த உள்ளார்.
மாநாட்டின் மூன்றாம் நாளான ஏப். 30ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்த உள்ளார்.
அப்போது, வெளியுறவுத் துறையில் இந்தியாவின் தொலைநோக்குத் திட்டம் குறித்தும், மேற்காசிய போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் குறித்தும் பிரதமர் மோடி உரையாற்றுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
முக்கிய நாடுகளுக்கான தூதர் நியமனங்களுக்கு, தொழில்முறை ராஜதந்திரிகளைத் தாண்டி மற்றவர்களையும் கருத்தில் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில், இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.