மும்பை:
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அசத்தியது சிஎஸ்கே அணி. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே 6 விக்கெட்கள் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் 54 பந்துகளில் 101 ரன்கள் விளாசி மிரட்டினார். 208 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மும்பை அணி 19 ஓவர்களில் 104 ரன்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக திலக் வர்மா 37, சூர்யகுமார் யாதவ் 36 ரன்கள் சேர்த்தனர். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்னில் நடையை கட்டினர்.
சிஎஸ்கே அணிக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது. இந்த வெற்றியின் வாயிலாக சிஎஸ்கே அணி 8 புள்ளிகளுடன் பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறியது.
ஆட்ட நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சன் கூறியதாவது: நான் விஷயங்களை எளிமையாக வைத்திருக்க முயற்சி செய்கிறேன்.
வான்கடே ஆடுகளம் வழக்கமானது போன்று இல்லை. பந்து சற்று நின்று வந்தது. எனவே, அந்தச் சூழலில் இருந்து அணிக்கு என்ன தேவை என்பதை மதிப்பிடுவதே எனது வேலையாக இருந்தது.
நாங்கள் சில விக்கெட்டுகளைத் தொடர்ந்து இழந்து கொண்டிருந்தோம், எனவே நிலைத்து நின்று விளையாடும் ஒரு பேட்ஸ்மேன் களத்தில் இருக்க வேண்டியது அவசியம் என்று நான் நினைத்தேன்.
அதையே நான் செய்ய முயற்சித்தேன். அது சரியாக நடந்தது. ஆட்டம் எதைச் செய்ய வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கும்.
நான் இப்படித்தான் விளையாடுவேன், இதையேதான் செய்வேன் என்று முன்கூட்டியே ஒரு எண்ணத்துடனோ அல்லது திட்டமிட்ட மனநிலையுடனோ வர வேண்டிய அவசியமில்லை.
ஆட்டத்தின் சூழ்நிலையையும், அணிக்கு எது தேவை என்பதையும் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு விளையாடுவதே எனது பொறுப்பு.
விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழாமல் இருந்திருந்தால், நான் இன்னும் சற்று முன்னதாகவே அதிரடியாக விளையாடத் தொடங்கியிருப்பேன்.
ஆனால், விக்கெட்டுகள் சரிந்ததால், இன்னிங்ஸை சிறப்பாக முடித்துக் கொடுக்க வேண்டியது அவசியமானதாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.