தமிழகத்தில் கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏப்.30, மே 1 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு!!

சென்னை:
தமிழகத்தில் கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏப்.30, மே 1 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வடக்கு உள் கர்நாடகா முதல் குமரிக்கடல் வரை தெற்கு உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக சுமார் 900 மீட்டர் உயரத்தில், ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் நாளை (ஏப்.26) ஓரிரு இடங்களிலும், 27-ம் தேதி மேற்கூறிய இடங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதர தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 28, 29 தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

30-ம் தேதி கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில், மே 1-ம் தேதி மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் நாமக்கல் மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமானது முதல் கன மழையும், இதர தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நாளை முதல் 29-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *