இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!!

ஜகார்த்தா:
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் 84 பேர் காயமடைந்துள்ளனர்.

தலைநகர் ஜகார்த்தாவுக்கு வெளியே உள்ள பெகாசியில் திங்கட்கிழமை இரவு ஒரு பயணிகள் ரயிலும், ஒரு நீண்ட தூர ரயிலும் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாக இந்தோனேசிய அரசு ரயில்வே நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பாபி ரசிடின் கூறினார்.

இந்தோனேசிய அரசின் தேடல் மற்றும் மீட்பு அமைப்பின் தலைவர் முகமது ஷாஃபி, செவ்வாயன்று மீட்புப் பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும், சிதைந்த பெட்டிகளில் சிக்கியிருந்த பயணிகளை மீட்பது ஒரு கடினமான பணியாக இருந்ததாகவும் கூறினார்.

பெண்கள் மட்டுமே பயணித்த ஒரு பெட்டி இந்த விபத்தில் பெரும் பாதிப்பைச் சந்தித்தது. அதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் பெண்கள் என்றும், அவர்களில் பெரும்பாலானோர் உலோகத்தால் நசுங்கி உயிரிழந்தனர் என்றும் ஷாஃபி கூறினார்.

பெகாசியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தப் பிறகு, கடுமையான போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க உதவும் வகையில் ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் மேம்பாலம் கட்ட ஒப்புதல் வழங்கியுள்ளதாக இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாந்தோ கூறினார்.

மேலும், இந்த மோதல் குறித்து அதிகாரிகள் விசாரிப்பார்கள் என்றும், இந்த ரயில் பாதையின் பெரும் பகுதிகள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்தோனேசியாவின் தேசிய போக்குவரத்துப் பாதுகாப்புக் குழு (KNKT) இந்த விபத்து குறித்த விசாரணையை தொடங்கியுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *