சென்னை:
இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வெறுப்புக் கருத்துகளை தெரிவித்தாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புதுச்சேரி கம்பன் கலை அரங்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மகளிரணி நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கட்சித் தலைவர் திருமாவளவன், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வெறுப்புக் கருத்துகளை தெரிவித்ததாக, இந்து முன்னணி பொதுச் செயலாளர் டி.என்.கண்ணன் புகார் அளித்திருந்தார்.
இதன் அடிப்படையில், புதுச்சேரி ஒதியஞ்சாலை போலீசார் திருமாவளவன் மீது வழக்குப் பதிவுசெய்தனர்.
புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி விசிக தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, ‘கல்விக்கு எதிரான சனாதன கொள்கை என்ற அடிப்படையிலேயே திருமாவளவன் பேசினார்.
வெறுப்புப் பேச்சு எதையும் பேசவில்லை. 3 ஆண்டுகள் மட்டுமே தண்டனை விதிக்கக் கூடிய பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 6 ஆண்டுகள் தாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கு தொடர முறையான அனுமதி பெறப்படவில்லை’ என வழக்கறிஞர்கள் டி.பார்வேந்தன், எஸ்.தீபிகா ஆகியோர் வாதிட்டனர்.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, திருமாவளவனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.