தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து இன்னும் நாங்கள் சிந்திக்கவில்லை; முடிவெடுக்கவில்லை….. அரசியலில் அடுத்தது என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் – திருமாவளவன்!!

சென்னை:
“தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து இன்னும் நாங்கள் சிந்திக்கவில்லை; முடிவெடுக்கவில்லை. அரசியலில் அடுத்தது என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

காரல் மார்க்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ நடந்து முடிந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அதிமுக – பாஜக தலைமையிலான சங்பரிவார் அரசியலை வீழ்த்தியுள்ளது.

அந்த வகையில் நாங்கள் முன்னெடுத்த முயற்சி வெற்றி பெற்றதாக எண்ணி மகிழ்ச்சியடைகிறோம். இதற்காக மக்களுக்கு நன்றியை உரித்தாக்குகிறோம்.

இடதுசாரிகளுடன் இணைந்து நாங்கள் அரசியல் களத்தில் பயணித்து வருகிறோம். எதிர்காலத்திலும் முக்கிய அரசியல் முடிவுகளை இணைந்தே எடுப்போம்.

தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து இன்னும் நாங்கள் சிந்திக்கவில்லை; முடிவெடுக்கவில்லை.

அரசியலில் அடுத்து என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். ஊகமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது” என்று கூறினார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவையென்ற நிலையில், 108 இடங்களில் மட்டுமே தவெக வெற்றி பெற்றுள்ளது.

ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாததால், மற்ற கட்சிகளின் ஆதரவு அக்கட்சிக்கு தேவை.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 5, விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயுஎம்எல் கட்சிகள் தலா 2 இடங்களிலும், தேமுதிக 1 தொகுதியிலும் வெற்றிபெற்றுள்ளது.

அதேபோல அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பெற்ற பாமக 4, அமமுக 1 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. விஜய் ஆட்சியமைக்க இதில் சில கட்சிகளின் ஆதரவை பெற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *