சென்னை ;
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தவெக அதிக இடங்களில் வென்று ஆட்சி அமைத்த நிலையில், திமுக ஆட்சியில் அரசின் தலைமை வழக்கறிஞராக பதவி வகித்த பி.எஸ்.ராமன் தனது பதவியை ராஜினாமா செய்ததால், அந்தப் பதவி காலியானது.
இந்த நிலையில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணை தலைமை வழக்கறிஞராக நியமித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, இன்று காலை அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
யார் இந்த விஜய் நாராயண் ?: பள்ளி கல்வியை அப்போதைய பிஹார் மாநிலத்தில் இருந்த ராஞ்சியில் முடித்த விஜய் நாராயண், தனது பட்டப்படிப்பை சென்னை லயோலா கல்லூரியிலும், சட்டப்படிப்பை சென்னை அரசு சட்டக் கல்லூரியில் முடித்தார்.
அரசியலமைப்பு சட்டத்தை மேம்படுத்த பணியாற்றிய குழுவில் இடம்பெற்ற பிரபல வழக்கறிஞர் எம்.கே.நம்பியார் இவரது தாத்தா ஆவார்.
மத்திய அரசின் தற்போதைய அட்டர்னி ஜெனரலான கே.கே.வேணுகோபால் இவரது உறவினர். வரலாற்று ஆய்வாளரும், பத்திரிக்கையாளருமான சர்தார் கே.எம்.பணிக்கர் இவரது தாய்வழி தாத்தா.
தொழிலாளர், அரசியலமைப்பு, நிர்வாகம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு வகையான சட்டம் குறித்த வழக்குகளில் ஆஜரான இவருக்கு, 2004-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து வழங்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத்திலும், பிற பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும் ஆஜரானவர் விஜய் நாராயண்.
இவர், இந்திய சட்ட நிறுவனத்தின் சென்னை மண்டல செயற்குழு உறுப்பினராக இந்திய தலைமை நீதிபதியால் 2012-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளியின் பொதுக் குழு உறுப்பினராக கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியால் நியமிக்கப்பட்டார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தொன்மையான வழக்கறிஞர் சங்கமான மெட்ராஸ் பார் அசோசியேசனின் தலைவராக இருந்தவர்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் 2017 முதல் 2021-ம் ஆண்டு வரை தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.