அதிமுக ஒரு டைட்டானிக் கப்பல் அதை உடைத்துவிட்டார்கள் என்று நடிகர் செந்தில் விமர்சித்துள்ளார்.
கோவையில் நாடாளுமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள அண்ணாமலையை ஆதரித்து நடிகர் செந்தில் பரப்புரை மேற்கொண்டார். நடிகரும் பாஜக அமைப்பு செயலாளருமான செந்தில் சின்னையம்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், அண்ணாமலை பெரிய பணக்காரர் இல்லை. விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். மோடியுடன் சேர்ந்து என் மண் என் மக்கள் யாத்திரையை நடத்தியுள்ளார் .நான் அம்மா கட்சியில் இருந்தேன். அந்த கட்சி சரியில்லாததால் நல்ல கட்சி வேண்டும் என்று பாஜகவுக்கு வந்து விட்டேன் .
புரட்சித்தலைவரும், புரட்சித் தலைவியும் நல்ல டைட்டானிக் கப்பல் வைத்திருந்தார்கள். அதை எடப்பாடி எடுத்து ஓட்ட தெரியாமல் ஓட்டி பாறையில் முட்டி சுக்கு நூறாக ஆக்கிவிட்டார் . அதேபோல கட்சியையும் உடைத்து எரிந்து விட்டார். கச்சத்தீவை மோடி கையில் எடுத்துள்ளார். இந்தியா நன்றாக இருக்க வேண்டும் என்றால் அது மோடி வந்தால் தான் நடக்கும் என்றார்.