முதல்வர் விஜய்யின் ‘நாகரிக சந்திப்பு; ஊழல் வழக்குகளில் இருந்து திமுக முன்னாள் அமைச்சர்களை காப்பாற்றி விடக் கூடாது – வானதி சீனிவாசன்!!

சென்னை:
‘முதல்வர் விஜய்யின் ‘நாகரிக சந்திப்பு’, ஊழல் வழக்குகளில் இருந்து திமுக முன்னாள் அமைச்சர்களை காப்பாற்றி விடக் கூடாது.

ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை நடத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும்’ பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தமிழ்நாடு முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்தார்.

ஆட்சி அமைத்த பின், தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கட்சித் தலைவர்களை சந்திப்பது பாராட்டுக்குரியது.

அதே நேரத்தில், அனைத்து முக்கிய கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்காமல், தேர்வு செய்து, குறிப்பிட்ட சிலரை மட்டுமே சந்தித்துள்ளார்.

அரசியல் களத்தில் நேர் எதிராக நிற்பவர்களையும், சித்தாந்த ரீதியாக எதிர் துருவத்தில் இருப்பவர்களையும் சந்திப்பதே அரசியல் நாகரிகம்.

பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியைத் தக்க வைக்கவே, இந்த ‘நாகரிக அரசியல் பயணம்’ என்ற விமர்சனத்தையும் புறந்தள்ளி விட முடியாது.

முந்தைய திமுக அரசு மீதும், அமைச்சர்களாக இருந்த பலர் மீதும் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. திமுக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திதான் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்துள்ளது.

திமுக ஆட்சியின் வீழ்ச்சிக்கு ஊழலும், சட்டம் – ஒழுங்கு சீரழிவும் தான் முக்கிய காரணம். திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பலர் மீது, ஊழல் செய்ததற்கான ஆதாரங்களுடன் வழக்குப் பதிவு செய்யுமாறு, தமிழக காவல்துறை தலைமை இயக்குநர், தலைமைச் செயலாளருக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது. ஆனாலும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

முதல்வர் ஜோசப் விஜய்யின் ‘நாகரிக சந்திப்பு’, ஊழல் வழக்குகளில் இருந்து, திமுக முன்னாள் அமைச்சர்களை காப்பாற்றி விடக் கூடாது.

எந்தெந்த துறைகளில் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதோ, அது குறித்து முறையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

ஊழல்வாதிகளுக்கு தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் புதிய கட்சியை தமிழக மக்கள் ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். எனவே, ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிவிடக் கூடாது.

இதை முதல்வர் ஜோசப் விஜய் உறுதி செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *