யூனிட்டிற்கு 34 காசுகள் கூடுதலாக வசூலிக்கும் மின்வாரியத்தின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது – தினகரன்!!

மின்சாரத்திற்கு யூனிட்டிற்கு 34 காசுகள் கூடுதலாக வசூலிக்கும் மின்வாரியத்தின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைதள பக்கத்தில், வெளிச்சந்தையில் தொழிற்துறையினர் வாங்கும் மின்சாரத்திற்கு யூனிட்டிற்கு 34 காசுகள் கூடுதலாக வசூலிக்கும் மின்வாரியத்தின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது – மின்கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினரை முற்றிலுமாக முடக்கும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

தமிழகத்தில் உயரழுத்த மின்பிரிவில் இடம்பெறும் நூற்பாலைகள், ஜவுளி ஆலைகள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் வெளிச்சந்தையில் இருந்து வாங்கும் மின்சாரத்திற்கு யூனிட் ஒன்றுக்கு ஏற்கனவே வசூலிக்கப்படும் 1.96 ரூபாயுடன் கூடுதலாக 34 காசுகள் வசூலிக்க மின்வாரியம் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்ய தனியார் நிறுவனங்களிடமிருந்தும், வெளிச்சந்தையில் இருந்தும் மின்சாரத்தை கொள்முதல் செய்யும் மின்சார வாரியம், உயர் அழுத்த மின் நுகர்வோர் தங்களின் தேவைக்காக வெளிச்சந்தையில் வாங்கும் மின்சாரத்திற்கு கூடுதல் வரி விதிப்பது எந்தவகையில் நியாயம் ? என தொழில்நிறுவனங்களின் பிரதிநிதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த மாதம் ஒருமுறை மின் உபயோகம் கணக்கீடு (221), மின்சார நிலைக் கட்டணம் ரத்து (222), உள்ளிட்ட எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முன்வராத திமுக அரசு, தன் தேர்தல் அறிக்கையில் இடம்பெறாத பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினர் மீதான விரோதப் போக்கையே தொடர்ந்து கடைபிடித்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் கடும் இன்னல்களுக்குள்ளாகி பல சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில், லாப நோக்கத்தை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு, தொழில் நிறுவனங்கள் வெளிச்சந்தையில் இருந்து வாங்கும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முடிவு தொழில்துறையை முற்றிலுமாக முடக்கக்கூடிய செயலாகும்.

எனவே, மின்சாரச் சந்தையில் தொழில்துறையினர் வாங்கும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, குளறுபடிகள், ஊழல் மற்றும் முறைகேடு புகார்கள் நிறைந்திருக்கும் மின்வாரியத்தை மறுசீரமைத்து வருவாயைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *