முதல்வர் விஜய் தலைமை யிலான அரசுக்கு 6 மாத காலம் அவகாசம் கொடுக்க வேண்டும் – கமல்ஹாசன் கருத்து!!

மதுரை:
முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு 6 மாத காலம் அவகாசம் கொடுக்க வேண்டுமென்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

“முதல்வர் விஜய்யின் ஆட்சி எப்படி உள்ளது என இரண்டு நாட்களில் கருத்து சொல்வது ஜோசியமாகத் தான் இருக்க முடியும்.

ஆறு நாள், பதினைந்து நாட்களில் கருத்து சொல்வதும் அப்படித்தான் இருக்க முடியும். அவருக்கு ஆறு மாதம் அவகாசம் கொடுக்க வேண்டும்.

புதியவர்கள் நிறைய பேர் பொறுப்புக்கு வந்துள்ளார்கள். அரசியலுக்கு இது புதிது கிடையாது.

சுதந்திரத்துக்கு பிறகு பொறுப்புக்கு வந்தவர்கள் அனைவரும் புதியவர்கள்தான். மக்கள் வாக்களித்து உள்ளார்கள்.

அந்த ஆட்சி நல்லபடியாக நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். நாங்களும் அதை கவனிக்கிறோம்.

என்னைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் தமிழ் பேசும் ஒருவர் அரசியல் கட்சியை தொடங்கினால் அது திராவிட கட்சிதான்.

புதிய கல்வி கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டுமென கட்டாயப்படுத்த முடியாது.

நானும் ரஜினிகாந்தும் ஒருவரை ஒருவர் பார்த்து பொறாமை பட்டது கிடையாது. போட்டிதான் போடுவோம். நாங்கள் சினிமாத்துறையில் இருக்கிறோம்.

கிரிக்கெட் விளையாடி இருந்தாலும் இப்படித்தான் இருந்திருப்போம்” என தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *