சென்னை:
”கட்சித் தாவல் தடைச் சட்ட புகார் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், அதை எதிர்கொள்ளும் நபர் அமைச்சராக இருந்தால் ஆர்டிக்கல் 142 வழங்கும் சிறப்பு அதிகாரம் மூலம் உச்ச நீதிமன்றம் அவரை பதவி நீக்கம் செய்யலாம்” என அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “கட்சித் தாவல் தடைச் சட்ட புகாருக்கு ஆளாகிய ஒருவரை தகுதி நீக்கம் செய்ய அரசியலமைப்பு சட்டத்தின் 10 வது அட்டவணை சபாநாயகருக்கு அதிகாரம் தருகிறது.
அவ்வாறு புகாருக்கு உள்ளானவரை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் முன் ஆர்ட்டிகல் 163- ன் படி முதல்வரிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் திருப்தி அடைவது அவசியம்.
விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் அதை எதிர் கொள்ளும் நபர் அமைச்சராக இருந்தால் ஆர்டிக்கல் 142 வழங்கும் சிறப்பு அதிகாரம் மூலம் உச்ச நீதிமன்றம் அவரை பதவி நீக்கம் செய்யலாம்.
மணிப்பூர் மாநில அமைச்சர் தவுனோஜம் ஷியாம்குமார் சிங் வழக்கில் 2020-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இதற்கு நல்ல உதாரணம்.
ஆக எல்லா நிலைகளிலும் அரசியலமைப்பு சட்டமே மேலோங்கி நிற்கும். இதுதான் நமது அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்பாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பின் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு எதிராக சி.வி.சண்முகம் தரப்பினர் பகிரங்கமாகவே போர்க்கொடி தூக்கியதுடன், 25 எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த பழனிசாமி, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எம்எல்ஏ-க்களின் கட்சிப் பதவிகளைப் பறித்து அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
அதேநேரத்தில், பழனிசாமி தங்களை மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கியது செல்லாது என சண்முகம் தரப்பு அதிரடியாக அறிவித்துள்ளது.
மேலும், சட்டப்பேரவையில் தங்களின் நிலைப்பாடு குறித்து இருதரப்பும் சபாநாயகரை தனித்தனியாகச் சந்தித்து மனு அளித்துள்ளனர். சபாநாயகர் அதிமுக விவகாரம் குறித்து விரைவில் முடிவை அறிவிப்பதாக கூறியுள்ளார்.
சி.வி.சண்முகம் தரப்பினர் ஒருவேளை அமைச்சராக பதவியேற்றால் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்று எச்சரிக்கும் பொருட்டு அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை எம்.பி இந்த பதிவினை வெளியிட்டுள்ளார்.