இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி சிறுபிள்ளைகளை, குழந்தைகளை பிரச்சாரம் செய்ய வைத்து, அவர்களின் வீட்டில் உள்ள பெரியவர்கள், பெற்றோர்களிடம் பிரச்சாரம் செய்யவைத்து திட்டமிட்டு வாக்களிக்க வைத்து ஆட்சிக்கு வந்துள்ளனர் – தவெகவை சாடிய ஸ்டாலின்!!

தஞ்சை:
“சமூக வலைதளங்கள், இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி சிறு பிள்ளைகளை, குழந்தைகளை பிரச்சாரம் செய்ய வைத்து, அவர்களின் வீட்டில் உள்ள பெரியவர்கள், பெற்றோர்களிடம் பிரச்சாரம் செய்யவைத்து திட்டமிட்டு வாக்களிக்கச் செய்து ஆட்சிக்கு வந்துள்ளனர்.

அது நம் கண்ணுக்கு தெரியாமல் போய்விட்டது” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தஞ்சையில் பூண்டி கலைவாணன் இல்ல திருமண நிகழ்வில் கலந்துகொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தோல்வி, வெற்றி இரண்டையும் சமமாக கருதி பாடுபடும் இயக்கம் திமுக. நடந்து முடிந்த தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்துவிட்ட தை போல, இத்துடன் திமுக முடிந்துவிட்டது என இரங்கற்பா பாடுவதற்கு சிலர் முன்வந்துள்ளனர். நம்முடைய இன எதிரிகள் அந்த சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், திமுக இதுவரை எத்தனையோ தேர்தல்களை பார்த்துள்ளது. 1949ல் தொடங்கிய திமுக, பல தேர்தல்களை சந்தித்து வெற்றியையும், தோல்வியையும் பெற்றுள்ளது.

தோல்வியடையும்போதுதான் திமுக ஃபீனிக்ஸ் பறவையாக எழுந்திருக்கிறது. இங்கே பேசியவர்கள், மேடையில் உள்ளவர்கள் மற்றும் எதிரில் உள்ளவர்கள் எல்லோரும் சோகமாக இருப்பதுபோல் உள்ளனர்.

நாம் சோகமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் தான் இன்றைக்கும் ஆட்சியில் இருக்கிறோம். 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது எல்லா தரப்பு மக்களுக்கும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியது திமுக அரசு.

நாம் வெற்றி வாய்ப்பை இழந்து, புதிய ஆட்சி அமைந்தபோது, அவர்களுக்கு வாழ்த்து சொன்னேன்.

அப்போது, ‘திமுக நிறைவேற்றிய திட்டங்களை தொடர வேண்டும்’ எனச் சொன்னேன்.

அதன்படி நாம் வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருப்பதை கண்கூடாகப் பார்க்கிறோம். அதனால்தான் இப்போதும் நாம் தான் ஆட்சியில் இருக்கிறோம் என்று சொன்னேன்.

நாம் செய்த சாதனைகளை எல்லாம் யாராலும் மாற்றிட முடியாது. நாம் கொண்டுவந்த இந்த திட்டங்கள் நடக்கும் வரை திராவிட மாடல் தான் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும்.

இந்த தேர்தலில் தோல்வியடைந்ததும் நான் சோர்வடையவில்லை. நாம் எப்படி வெற்றி வாய்ப்பை இழந்தோம் என்பதை ஆராய ஒரு குழுவை அமைத்துள்ளோம்.

அந்த ஆய்வின் போது, நம்மிடம் என்ன பிரச்சினை, என்ன குறை எனக் கேட்டறியப்படும்.

இதற்காக ஒரு இணையதளமும் தொடங்கியுள்ளோம். அதில் அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.

தேர்தலுக்கு முன்பாக மக்களை சந்தித்து பல்வேறு பணிகளை திமுக செய்தது. ஆனாலும் ஏன் ஆட்சிக்கு வர முடியவில்லை?. ஆனால், தேர்தலுக்கு எந்தப் பணிகளையும் செய்யாமல், மக்களை கூட சந்திக்காமல், பாக முகவர்கள், பூத் ஏஜெண்டுகள், வாக்கு எண்ணும் ஏஜெண்டுகள் கூட நியமிக்காமல் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ளார்கள். அது தவறு இல்லை.

அவர்களின் வெற்றிக்கு காரணம் சமூக வலைதளம். இன்ஸ்டாகிரா மை பயன்படுத்தி சிறுபிள்ளைகளை, குழந்தைகளை பிரச்சாரம் செய்ய வைத்து, அவர்களின் வீட்டில் உள்ள பெரியவர்கள், பெற்றோர்களிடம் பிரச்சாரம் செய்யவைத்து திட்டமிட்டு வாக்களிக்க வைத்து ஆட்சிக்கு வந்துள்ளனர்.

அது நம் கண்ணுக்கு தெரியாமல் போய்விட்டது. இனி நாம் உஷாராக இருந்து அதையும் முறியடிக்க திட்டங்களை தீட்டியுள்ளோம்.

எனவே நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. மீண்டும் நாம் தான் ஆட்சிக்கு வருவோம் என்று பணியாற்றுங்கள்.

நாம் இன்னும் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருந்தால், பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியிருக்கலாம் என்பதே எங்கள் கவலையாக உள்ளது. ஆனாலும், எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்படுவோம்.” என்று கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *