அனுவாவி மலையில் முருகன் அடிவாரத்தில் அகத்தியர்…

முனிவரும், சித்தருமான அகத்தியர், முருகக்கடவுளின் சீடராக அறியப்படுகிறார்.

குருவுக்கும், சீடருக்கும் ஒரே இடத்தில் கோவில் இருப்பது கோவை மாவட்டத்தில் அனுவாவியில் தான். குருவான சுப்பிரமணியசுவாமி மலை உச்சியில் இருந்து அருள்பாலிக்கிறார். சீடரான அகத்தியர் மலை அடிவாரத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

அடிவாரத்தில் உள்ள அகத்தியர் தினமும் மலைக்கு சென்று சுப்பிரமணிய சுவாமியை வணங்கி விட்டு வருவதாக நம்பப்படுகிறது. அங்குள்ள குகையில் தான் அகத்தியர் கோவிலை 2-ம் தலைமுறையாக பராமரித்த காட்டுசுவாமிகள் தவம் மேற்கொண்டு இருக்கிறார்.

அனுவாவி முருகனின் சிறப்புகளை இங்கு காண்போம்:

குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அதுவும் கோவை, திருப்பூர், மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் முருகப் பெருமானுக்கு ஏராளமான மலைக்கோவில்கள் உள்ளன. மருதமலை, சென்னிமலை, சிவன்மலை என்று பல உதாரணங்களை சொல்லலாம்.

இவற்றில் கோவை மாவட்டத்தில் உள்ள அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலும் ஒன்று.

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள இந்த கோவில் ராமாயண இதிகாசத்துடன் தொடர்புடையது.


சஞ்சீவி மலையை ஆஞ்சநேயர் தூக்கிச் செல்லும் போது அவருக்கு தாகம் எடுக்க அவர் முருகனை வேண்டியிருக்கிறார். அப்போது முருகன் வேலால் குத்தி தீர்த்தம் வரவழைத்து ஆஞ்சநேயரின் தாகம் தீர்த்துள்ளார்.

அனுவாவி அகத்தியர்

இந்த நிகழ்வு அனுவாவி மலையில் தான் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது.

இன்றும் கோவிலில் சுரக்கும் புனித தீர்த்தத்தை பருகினால் நோய் நொடிகள் நீங்குவதாக கூறப்படுகிறது. மலையின் தென் பகுதியில் மருதமலை கோவிலும், வடக்கு பகுதியில் அனுவாவி கோவிலும் உள்ளன.

கோவில் கருவறையில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

முன் மண்டபத்தில் விநாயகரும், முருகனின் படைத்தளபதி வீரபாகுவும் வீற்றிருக்கின்றனர்.

ஆஞ்சநேயர் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். நவக்கிரக சன்னதியும் இங்கு உள்ளது. சிவபெருமான் அருணாசலேஸ்வரராக அருள்பாலிக்கிறார்.

கோவையில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் கோவில் உள்ளது. திருமண தடை நீக்கும் ஆலயமாகவும், குழந்தை வரம் தரும் ஆலயமாகவும் இந்த தலம் திகழ்கிறது.

கோவையில் இருந்து ஆனைக்கட்டி செல்லும் வழியில் இந்த மலைக்கோவில் அமைந்துள்ளது.

மலை மீது அமர்ந்து அருள்பாலிக்கும் சுப்பிரமணிய சுவாமி ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தி உள்ளார்.

அவரை போலவே அவரது சிஷ்யரான அகத்தியரும் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்மழை பொழிந்து வருகிறார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *