சிவாலய தரிசனம் செய்தால் கூடுதல் பலன்- பாவம் நீக்கி புண்ணியம் தரும் ரிஷப விரத வழிபாட்டின் மகிமை…

உலகில் எல்லா மதங்களும், விரதம் என்ற ஒன்றை குறிப்பிட்ட காலத்தில் கடைபிடிக்க வலியுறுத்துகின்றன. ஏனெனில் விரதம் என்பது, ஆன்மிகத்தையும் தாண்டிய அறிவியல்.

வைகாசி மாதத்துக்கும், தெய்வ வழிபாட்டுக்கும் பல முக்கியத்துவம் இருக்கின்றன. இம்மாதம் சிவன், விஷ்ணு, முருகன், நரசிம்மன், அனுமன் வழிபாடு மற்றும் புனித நீராடலுக்கு உகந்த மாதமாகக் கருதப்படுகிறது.புத்தர் அவதரித்தது வைகாசி பவுர்ணமி ஆகும்.

இதே நாளில்தான் புத்தர் அரச மரத்தடியில் தவமிருந்தபோது ஞானம் பெற்றார். அதேபோல் ஒரு வைகாசி பவுர்ணமியில் இப்பூவுலகைத் துறந்து மோட்சம் பெற்றார்.

வியாசர் தங்கத் தட்டில் அவதரித்த மாதம் வைகாசி. மேலும் தத்தாத்ரேயர் போன்ற தெய்வ அவதாரங்கள் வைகாசியில் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.

திருஞான சம்பந்தர், சோமாசி மாறனார், நமி நந்தியடிகள், கழற்சிங்கர் போன்ற நாயன்மார்களும்; நம்மாழ்வார், திருக்கோட்டியூர் நம்பிகள் போன்ற வைணவப் பெரியவர்களும் அவதரித்த மாதம் வைகாசி, காஞ்சிப் பெரியவர் பிறந்ததும் வைகாசி மாதமே.

இந்த வைகாசி மாதத்தில் வளர்பிறை அஷ்டமியில் விரதம் இருந்து வழிபடுவது சிறப்பு என்கின்றன புராணங்கள். சிவ பெருமானின் அருளைப் பெறுவதற்கு பல விரதங்கள் இருந்தாலும், அதில் முக்கியமானது ரிஷப விரதம்.

இந்த விரதம் அனுஷ்டிப்பதற்கு சரியான காலகட்டம் சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் வைகாசி மாதமாகும். வைகாசி மாதத்தில் செய்யப்படும் வழிபாடுகள், புனித நீராடல்கள், தான தர்மங்கள், விரதங்கள் ஆகியன மனித வாழ்க்கையில் ஆயுள், செல்வம், புத்திரப்பேறு, குடும்ப அமைதி, மனநிம்மதி அனைத்தையும் அளிக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் வைகாசி மாதத்தில் ரிஷப விரதம் இருப்பது பாவம் நீக்கி புண்ணியம்தரும் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

வைகாசி மாதத்தில் வரும் மாத சிவராத்திரி, பிரதோஷம் ஆகிய தினங்களில் இந்த ரிஷப விரதத்தை மேற்கொள்வது சிறந்தது.

எனினும் வைகாசி வளர்பிறை அஷ்டமியில் இடபக்கத்தில் அமர்ந்த நிலையில் உள்ள அம்மையப்பரான உமா மகேஸ்வரரை நினைத்து பின்பற்றப்படும் விரதம் இதுவாகும்.

அந்த வகையில் வைகாசி வளர்பிறை அஷ்டமியான நாளை (சனிக்கிழமை) இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள் சிவ பக்தர்கள்.

ரிஷப விரதம் என்பது சிவ பெருமானின் வாகனமாக இருப்பவரும், அவரின் தொண்டராக இருக்கும் ரிஷபமாகிய நந்திதேவர் மற்றும் சிவபெருமான் ரிஷபாரூடர் என்கிற பெயரில் அழைக்கப்படும் சிவனுக்கு இருக்கும் விரதம் தான் ரிஷப விரதம் எனப்படுகிறது.

அந்தக் காலத்தில் மன்னர்கள் தங்கள் ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தவும், செல்வத்தை இரட்டிப்பாக்கவும் ரிஷப விரதம் அனுசரித்தனர்.

தற்போதைய காலத்திலும் நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் தங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து கவலைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, வாழ்வில் செழிப்பையும், மகிழ்ச்சியையும் பெற இந்த ரிஷப விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

ரிஷப விரதம் மேற்கொள்ளும் போது காலையில் எழுந்ததும் நீராடி விட்டு, வாசலில் கோலமிட வேண்டும். பின் நந்தி மீது ரிஷபாரூடராக வீற்றிருக்கும் சிவபெருமானின் புகைப்படத்தை வைத்து பூ போட்டு வணங்க வேண்டும்.

பின் சிவபெருமானுக்கு விளக்கேற்றி, சாம்பிராணி, தூபம் காட்டி சிவனுக்கு பிடித்த அரிசியால் செய்த பாயாசத்தை நைவேத்தியமாக படைத்து மனதார சிவனுக்குரிய மந்திரங்களை சொல்லி வழிபட வேண்டும்.

இந்த விரதம் மேற்கொள்ளும் போது மாலையில் சிவாலய தரிசனம் செய்ய வேண்டும்.

இரவில் வெறும் தரையில் படுத்து உறங்க வேண்டும். விரதம் இருக்கும் நாளன்று காலை முதல் இரவு வரை உண்ணாமல் இருக்க வேண்டும். முடியாதவர்கள் பால், பழங்கள் சாப்பிடலாம்.

பின்பு உங்களால் முடிந்த அளவிற்கு அக்கோவில்களில் சிவனடியார்களுக்கும், பக்தர்களுக்கும் அன்னதானம் செய்து அந்த பக்தர்களுடன் சேர்ந்து நீங்களும் பிரசாதங்களை சாப்பிட வேண்டும்.

பிறகு சிவ சிந்தனையுடன் வீட்டிற்கு திரும்பி, சிவனை வழிபட்டு இரவு உணவாக பால் மற்றும் பழங்களை சாப்பிட்டு ரிஷப விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

ரிஷப விரதம் பற்றி கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளன. ரிஷப விரதத்தை முறையாக அனுஷ்டிப்பவர்களுக்கு ஆயுள் அதிகரிக்கும், நோய்கள் அண்டாத வாழ்வு உண்டாகும், செல்வ நிலை உயரும்.

வாகன யோகம் மற்றும் வாகனம் சம்பந்தமான பிரச்சனைகளை போக்க வல்ல விரதம் இது.

வாகன விபத்துகள் அனைத்தும் நீங்கும். ரிஷப விரதத்தை முறையாக அனுஷ்டிப்பவர்களுக்கு ஆயுள் அதிகரிக்கும், நோய்கள் அண்டாத வாழ்வு உண்டாகும், செல்வ நிலை உயரும், அனைத்து நியாயமான ஆசைகளும் பூர்த்தியாகும், அஷ்ட யோகம் ஏற்படும்.

அஷ்டதிக் பாலகர்கள், கருட பகவான் போன்றோர்கள் இந்த ரிஷப விரதத்தை அனுஷ்டித்து சிவனிடம் பல வரங்களை பெற்றனர்.

இவ்விரதத்தைப் பின்பற்றியே திருமால் கருடவாகனத்தையும், இந்திரன் ஐராவதத்தையும், குபேரன் முத்து விமானத்தையும் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *