சென்னை:
தமிழக காவல் துறையின் சட்டம் – ஒழுங்கு டிஜிபி தேர்வுக்கு 3 பேரை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) பரிந்துரைத்துள்ளது.
தமிழக சட்டம் – ஒழுங்கு டிஜிபி-யாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆண்டு ஆக.31-ம் தேதியுடன் ஓய்வு பெற்றார்.
டிஜிபி பணி ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னரே, அடுத்து தகுதிவாய்ந்த டிஜிபி-க்களின் பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு (யுபிஎஸ்சி) மாநில அரசு அனுப்பிவைத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யவில்லை.
மேலும், பணி மூப்பு அடிப்படையில் டிஜிபி-க்களான சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்தீப்ராய் ரத்தோர் ஆகிய 3 பேரில் ஒருவர் புதிய டிஜிபி-யாக நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால், தமிழக அரசு இந்த பட்டியலிலேயே இல்லாத ஜூனியரான வெங்கடராமனை சட்டம் – ஒழுங்கு பொறுப்பு டிஜிபி-யாக நியமித்தது.
இதற்கிடையே தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடந்தபோது, சந்தீப் ராய் ரத்தோரை சட்டம் – ஒழுங்கு டிஜிபி-யாக தேர்தல் ஆணையம் நியமித்தது. தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில், தமிழகத்தில் புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக டெல்லியில் மத்திய பணியாளர் தேர்வாணையம் நேற்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலர் சாய்குமார், உள்துறை செயலர் மணிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில், டிஜிபி-க்களான ராஜீவ்குமார் (காவல் உயர் பயிற்சியகம்), சந்தீப் ராய் ரத்தோர், மகேஷ் குமார் அகர்வால் (அயல் பணியாக எல்லை பாதுகாப்பு படை-டெல்லி) ஆகிய 3 பேர் பட்டியலுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் ஒப்புதல் வழங்கி அவர்களின் பெயர்களை பரிந்துரைத்துள்ளது.
இந்த பட்டியல் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். இவர்களில் ஒருவரை சட்டம் – ஒழுங்கு டிஜிபி-யாக தமிழக அரசு முறைப்படி அறிவிக்கும்.
இதன் முடிவிலேயே சந்தீப் ராய் ரத்தோர்தொடர்வாரா? என்பது தெரியவரும். ஏற்கெனவே டிஜிபி பட்டியலில் சீமா அகர்வால், வன்னிய பெருமாள், வெங்கடராமன், வினித் தேவ் வான்கடே, சஞ்சய் மாத்தூர் பெயர்கள் இருந்தன.
இதில் சீமா அகர்வால் அடுத்த மாதத்துடன் பணி ஓய்வுபெற உள் ளார் என்பது குறிப்பிடத்தக்கது.