ஓஸ்லோ:
நார்வே செஸ் போட்டியின் 4-வது சுற்றில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனிடம் இந்திய வீரரும் உலக சாம்பியனுமான டி.குகேஷ் தோல்வி கண்டார்.
நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நார்வே செஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
நேற்று 4-வது சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் முன்னாள் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனும், நடப்பு உலக சாம்பியனும் இந்திய வீரருமான டி. குகேஷும் மோதினர். குகேஷ் வெள்ளை நிறக்காய்களுடனும், மேக்னஸ் கார்ல்சன் கருப்பு நிற காய்களுடனும் விளையாடினர்.
இதில் சிறப்பாக விளையாடிய மேக்னஸ் கார்ல்சன் 42-வது நகர்த்தலின்போது வெற்றி பெற்றார். கார்ல்சன் தற்போது 4.5 புள்ளிகளுடன் உள்ளார்.
மற்றொரு 4-வது சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் ஆர்.பிரக்ஞானந்தா சிறப்பாக விளையாடி ஜெர்மனி வீரர் வின்சென்ட் கீமெரை வீழ்த்தினார். அமெரிக்க வீரர் வெஸ்லி சோ அபாரமாக தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி பிரான்ஸ் வீரர் அலிரேசா பிரோஸ்ஜாவை தோற்கடித்தார்.
4-வது சுற்றின் முடிவில் அலிரேசா 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அதற்கடுத்த இடத்தில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா 6 புள்ளிகளுடன் உள்ளார்.
அமெரிக்க வீரர் வெஸ்லி சோ 5.5 புள்ளிகளையும், மேக்னஸ் கார்ல்சன் 4.5 புள்ளிகளையும், வின்சென்ட் கீமர் 4 புள்ளிகளையும், குகேஷ் 3.5 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.