சென்னை:
“புதிய கூட்டணி என்று சிபிஎம் பெயரை குறிப்பிட்டிருப்பது தவறானது. பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவை அதிகப் பிரசங்கித்தனம் என்று தான் சொல்ல வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார்.
தவெக, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளை குறிப்பிட்டு ‘தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணி’ என பிரவீன் சக்கரவர்த்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
இது குறித்து பிரவீன் சக்கரவர்த்தி தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (தவெக+காங்கிரஸ் + விசிக + ஐயூஎம்எல் +சிபிஐ+சிபிஎம்) கூட்டணியின் முதல் எம்.பி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன்.
என் மீது நம்பிக்கை வைத்த ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் விஜய்க்கு மனமார்ந்த நன்றி.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக ஒலிப்பேன் என்று லட்சக்கணக்கான கூட்டணித் தொண்டர் களுக்கு உறுதியளிக்கிறேன்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், இதற்கு தனது எக்ஸ் தளத்தில் எதிர்வினையாற்றியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது.
கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை.
தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கெனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது.
பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவை ‘அதிகப் பிரசங்கித்தனம்’ என்று தான் சொல்ல வேண்டும்.” என்று அவர் விமர்சித்துள்ளார்.