நாங்கள் அண்ணாமலையை இழக்கவில்லை; அண்ணாமலை தான் பாஜகவை இழந்துள்ளார்- அவருக்குத்தான் தற்போது கட்டம் சரியில்லை!! பாஜக மாநிலச் செயலாளர் மீனாட்சி கருத்து….

திருச்சி:
“அண்ணாமலைக்காக இயக்கத்தில் இருந்து சிலர் வெளியேறியிரு க்கலாம், ஆனால் அது கட்சிக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

நாங்கள் அண்ணாமலையை இழக்கவில்லை. அண்ணாமலை தான் பாஜகவை இழந்துள்ளார்.

அவருக்குத்தான் தற்போது கட்டம் சரியில்லை” என தமிழக பாஜக மாநிலச் செயலாளர் மீனாட்சி நித்திய சுந்தர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் 12 ஆண்டுகால சாதனைகளை விளக்கும் வகையில், திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மீனாட்சி நித்திய சுந்தர் இன்று செய்தியாளர் களிடம் கூறியது: நமக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இதுவரை 15 பிரதமர்கள் நாட்டை ஆட்சி செய்துள்ளனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் 12 ஆண்டு கால ஆட்சி என்பது வரலாற்றுச் சாதனை ஆகும். மோடியின் சாதனைகளைப் பார்த்து தான் மக்கள் தொடர்ந்து தங்களது ஆதரவை வழங்கி வருகிறார்கள்.

பிரதமர் மோடி முதன்முறை பொறுப்பேற்ற போதே நிர்வாகத்தை முழுமையாகச் சீரமைத்தார்.

மத்திய அரசின் திட்டங்கள், குறிப்பாக விவசாயிகளுக்குப் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.

தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் நாடு பெரும் அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது. தற்போது நாம் 3-வது கட்ட ஆட்சியில் அடிெயடுத்து வைத்துள்ளோம்.

வரும் 2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே எங்களது முக்கிய இலக்கு. தொழில் துறை, தனிமனித வளர்ச்சி, கல்வி, விவசாயம் மற்றும் இளைஞர்களின் மேம்பாடு உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய இலக்குகள் தற்போது தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அடுத்ததாக, மீண்டும் 4-வது முறையும் மக்களின் பேராதரவோடு பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும்.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக வரிப் பகிர்வு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உதவி மானியம் 341.7 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.506 கோடி வழங்கப்பட்டுள்ளதுடன், ஆண்டுதோறும் தமிழகத்தின் பொருளா தாரம் உயர நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. திருச்சியின் வளர்ச்சிக்கு மட்டும் ரூ5,650 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரயில்வே துறை, தேசிய நெடுஞ்சாலைகள், உள்கட்ட மைப்பு, கல்வி மற்றும் கல்லூரிகளை மேம்படுத்துதல் போன்ற திட்டங்களுக்குப் பெருமளவில் நிதி ஒதுக்கப்பட்டு, மாநிலம் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது.

வந்தே பாரத் ரயில் சேவை, 77 ரயில் நிலையங்கள் புதுப்பித்தல், மெட்ரோ ரயில் திட்டம், சர்வதேச விமான நிலைய மேம்பாடு, கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்தலங்களை மேம்படுத்துதல் என நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து முக்கியப் பணிகளையும் மத்திய அரசு செய்துள்ளது.

தமிழகத்திற்கு கல்வி நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு எந்தத் தாமதமும் செய்யவில்லை. ஏதேனும் நிர்வாக ரீதியிலான காரணங்க ளால் மட்டுமே அது தள்ளிப் போகிறது.

நிகழ்காலச் சூழலைக் கருத்தில் கொண்டு, மும்மொழி எதிர்ப்பைத் தாண்டி நாம் சிந்திக்க வேண்டும்.

தமிழகத்தில் வெறும் மொழி அரசியல் மட்டுமே நடத்தப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் நாம் பல மொழிகளைத் தெரிந்து கொள்வது அவசியமானது.

பாஜகவின் வளர்ச்சி என்பது தனிமனிதரைச் சார்ந்தது அல்ல. கட்சி வளர்ச்சியில் சில தடைகள் வரலாம்.

ஆனால், தன் உயிரையே தியாகம் செய்த தியாகிகளால் உருவான கட்சி இது. அண்ணாமலைக்காக இயக்கத்தில் இருந்து சிலர் வெளி யேறியிருக்கலாம், ஆனால் அது கட்சிக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

நாங்கள் அண்ணாமலையை இழக்கவில்லை. அண்ணாமலை தான் பாஜகவை இழந்துள்ளார்.

அவருக்குத்தான் தற்போது கட்டம் சரியில்லை. தமிழகத்தில் பாஜக கூட்டணி மிகவும் வலுவாகவும் நிலையாகவும் உள்ளது, வரும் நாட்களில் மேலும் பல புதிய கட்சிகள் பாஜக கூட்டணியில் இணையும்.

வருங்காலத்தில் மாற்றம் வரும். அது எந்த மாதிரியான மாற்றம் என்பது போகப்போக தான் தெரியும்.

ஒருவேளை திமுக கூட்டணிக்கு வந்தால் அப்போது பார்க்கலாம்.” இவ்வாறு அவர் கூறினார்

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *