சென்னை:
நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடர் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. இதன் குரூப் சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் குரூப்-ஜி மற்றும் ஹெச் பிரிவில் இடம்பெறுள்ள ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் அணிகள் அதன் முதல் ஆட்டத்தில் விளையாடின. இரண்டு அணிகளுக்கும் முதல் ஆட்டம் சவாலாக அமைந்தது.
ஸ்பெயின் vs கேப் வெர்டே: இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லும் பேவரைட் அணிகளில் ஒன்றாக ஸ்பெயின் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்திய நேரப்படி திங்கட்கிழமை இரவு இந்த தொடரில் முதல் முறையாக விளையாடும் ஆப்பிரிக்க கண்டத்தின் ‘கேப் வெர்டே’ அணி உடன் ஸ்பெயின் விளையாடியது.
எப்படியும் ஆட்டம் ஒன்சைடாக இருக்கும், ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தம் என்றெல்லாம் உலக கால்பந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. ஆனால், நடந்ததோ வேறு கதை.
அட்லாண்டாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் அணியின் கோல் முயற்சி அனைத்தையும் துல்லியமாக தடுத்தார் கேப் வெர்டே அணியின் கோல்கீப்பர் வோசின்ஹா.
அவருக்கு அணியின் தடுப்பாட்ட வீரர்கள் உதவினர். இதன் மூலம் இப்போது ‘டாக் ஆப் தி வேர்ல்ட்’ ஆகியுள்ளார் 40 வயதான வோசின்ஹா.
அதன் விளைவு ஸ்பெயின் அணி ஒரே ஒரு கோல் கூட இந்த ஆட்டத்தில் பதிவு செய்யவில்லை.
ஆட்டம் கோலின்றி சமனில் முடிந்தது. இது ஸ்பெயின் அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக அமைந்தது.
நிச்சயம் உருகுவே, சவுதி அரேபியா உள்ளிட்ட அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்பெயின் மீண்டு வர முயற்சிக்கும். இந்த ஆட்டத்தில் 8.5 என்ற பிளேயர் ரேட்டிங்கை வோசின்ஹா பெற்றார்.
பெல்ஜியம் vs எகிப்து: குரூப்-ஜி பிரிவு ஆட்டத்தில் பெல்ஜியம் மற்றும் எகிப்து அணிகள் பலப்பரீட்சை செய்தன.
2018 தொடரில் மூன்றாம் இடம் பிடித்து அசத்தியது பெல்ஜியம். இருப்பினும் கடந்த முறை குரூப் சுற்றோடு வெளியேறியது. மறுபக்கம் முகமது சாலா தலைமையிலான எகிப்து அணி.
நடப்பு தொடரில் இரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டம் தொடங்கிய 20-வது நிமிடத்தில் முதலில் கோல் பதிவு செய்து ஆதிக்கம் செலுத்தியது எகிப்து.
சாலா கொடுத்த அசிஸ்ட்டை பயன்படுத்தி பந்தை வலைக்குள் நுழைத்தார் அஷூர். இரண்டு அணிகளும் ஆட்ட நேரத்தில் பந்தை சம அளவில் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.
இதன் பின்னர் இரண்டாவது பாதியில் எகிப்து அணியை தவறு செய்ய வைத்தது பெல்ஜியம்.
அட்டாக்கிங் ஆட்டம் மூலம் எகிப்து வீரர்களை ஆட்டம் காண செய்தனர் பெல்ஜியம் வீரர்கள். அதன் பலனாக 66-வது நிமிடத்தில் சுய கோல் கொடுத்தார் எகிப்து அணியின் முகமது ஹானி.
இதன் பின்னர் இரு அணியும் கோல் பதிவு செய்யவில்லை. அதனால் ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது.
சவுதி அரேபியா vs உருகுவே: குரூப்-ஹெச் பிரிவில் இடம் பெற்றுள்ள சவுதி அரேபியா மற்றும் உருகுவே அணிகளுக்கு இடையிலான ஆட்டமும் 1-1 என சமனில் முடிந்தது.
இந்த ஆட்டத்தின் முதல் பாதி முழுவதும் உருகுவே ஆதிக்கம் செலுத்தியது. இருப்பினும் 41-வது நிமிடத்தில் சவுதி அணி கோல் பதிவு செய்தது.
தொடர்ந்து இரண்டாவது பாதியில் உருகுவே அணி பதில் கோல் பதிவு செய்தது. மேக்ஸி அராயோ 80-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்தார்.
இந்த ஆட்டத்தில் சவுதி அணியின் கோல்கீப்பர் முகமது அல்-ஓவைஸ் சிறப்பாக செயல்பட்டார். உருகுவே அணியின் கோல் முயற்சியை அவர் அபாரமாக தடுத்திருந்தார்.
மொத்தம் 10 ஷாட்களை ஆன்-டார்கெட்டில் உருகுவே வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஈரான் vs நியூஸிலாந்து: குரூப்-ஜி பிரிவு ஆட்டத்தில் ஈரான் மற்றும் நியூஸிலாந்து அணிகள் விளையாடின. இந்த ஆட்டமும் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரண்டு கோல்களை பதிவு செய்திருந்தார் நியூஸிலாந்தின் எலிஜா ஜஸ்ட். ஆட்டத்தின் 7 மற்றும் 55-வது நிமிடத்தில் அவர் கோல் பதிவு செய்தார். அதற்கான செட் அப்பை கிறிஸ் வுட் செய்திருந்தார்.
அதற்கான பதில் கோல்களை 32 மற்றும் 64-வது நிமிடத்தில் ஈரான் பதிவு செய்தது. இதனால் இந்த ஆட்டம் சமனில் முடிந்தது. இந்திய வம்சாவளி வீரர் சர்ப்ரீத் சிங், நியூஸிலாந்து அணிக்காக இந்த ஆட்டத்தில் விளையாடினார்.
ஈரான் வீரர் ரெமின் கோல் பதிவு செய்ய சக அணி வீரருக்கு உதவியதோடு தானும் கோல் பதிவு செய்திருந்தார்.
முதல் ஆட்டத்துக்கு பிறகு குரூப்-ஜி மற்றும் ஹெச் பிரிவில் இடம்பெற்றுள்ள எட்டு அணிகளும் தலா ஒரு புள்ளியுடன் உள்ளன.