கடும் சவால் ஆட்டத்தில் நியூஸிலாந்து – ஈரான் டிரா!!

2026 ஃபிபா உலகக் கோப்பைத் தொடரின் தனது முதல் போட்டியில் பல்வேறு சவால்களைத் தாண்டி களமிறங்கிய ஈரான் அணி, சோஃபி மைதானத்தில் நியூஸிலாந்துடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. இரு அணிகளும் நல்ல வேகத்துடனும் தாக்குதல் உத்திகளுடன் ஆடியதால் ஆட்டமே விறுவிறுப்பாக அமைந்தது.

ஃபிபா தரவரிசையின் படி நியூஸிலாந்து 84-வது இடம், ஈரானோ 20-வது இடம்.

ஆகவே ஈரான் தான் வெற்றி வாய்ப்புக்கான சாதகமுள்ள அணி என்றே பேசப்பட்டது. ஆனால், இருமுறை நியூஸிலாந்து முன்னிலை பெற்றது. ஈரான் மேலெழுந்து சமன் செய்ய நேரிட்டது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப்ரவரியில் ஈரானுக்கு எதிராக போர் நடவடிக்கைகளைத் தொடங்கியதன் பின்னணியில், உலகக் கோப்பையில் பங்கேற்பதே கேள்விக்குறியாக இருந்த சூழலில் ஈரான் அணி இந்தப் போட்டிக்காக வந்தது.

விசா சிக்கல்களால் தங்களின் பயிற்சி முகாமை அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவுக்கு மாற்ற வேண்டிய நிலையும் ஏற்பட்டது. மேலும், அணியுடன் தொடர்புடைய 11 அதிகாரிகள் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டனர்.

போட்டிக்கு முன்பாக 1979 இஸ்லாமியப் புரட்சிக்கு முந்தைய ஈரானின் அடையாளமான “லயன் அண்ட் சன்” கொடிகள் ரசிகர்களிடையே காணப்பட்டன.

அவற்றைத் தடுக்க உலகக் கால்பந்து கூட்டமைப்பான ஃபிபா முயன்ற போதிலும் அவை அரங்கில் தென்பட்டன.

அதே நேரத்தில், லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் ஈரானிய வம்சாவளி யினர் சிலர் தேசிய கீதத்தின்போது எதிர்ப்பு தெரிவித்து முழக்க மிட்டனர். எனினும் பெரும்பாலான ரசிகர்கள் ஈரான் அணிக்கு உற்சாகமான ஆதரவை அளித்தனர்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் ஈரான் ஆதிக்கம் செலுத்தினாலும், ஏழாவது நிமிடத்தில் நியூஸிலாந்து முன்னிலை பெற்றது.

கிறிஸ் உட் பந்தை சிறப்பாக கட்டுப்படுத்தி எலிஜா ஜஸ்ட் என்ற வீரருடன் இணைந்து தாக்குதல் அமைத்தார். அதனை எலிஜா ஜஸ்ட் வாலி ஷாட்டாக மாற்றி கோல் வலைக்குள் செலுத்தினார்.

இதற்கு பதிலடி கொடுக்க முயன்ற ஈரான் கேப்டன் மெஹதி தரேமி மைதானத்தின் நடுப்பகுதியிலிருந்து நியூஸிலாந்து வீரர்களுக்குப் போக்குக் காட்டி கடைந்து எடுத்து நீண்ட தூரம் பந்தை எடுத்துச் சென்று அடித்த ஷாட் கோல்போஸ்ட்டின் வலது கம்பத்தில் பட்டு வெளியேறியது.

இருப்பினும் 32-வது நிமிடத்தில் ஈரான் சமநிலையை எட்டியது. நியூஸிலாந்து வீரர் ஃபின் சுர்மான் தடுத்த பந்து, முன்னேறி வந்த ரமீன் ரெசாயன் வசம் சென்றது.

பாக்சிற்குள் நியூஸிலாந்து தடுப்பு வீரர்கள் கொசகொசவென்று இருந்தாலும் அவர் அதை அட்டகாசமான ஆங்கிளில் கோலுக்குள் தள்ளி அணியை மீண்டும் போட்டிக்குள் கொண்டு வந்தார்.

இரண்டாவது பாதியின் 55-வது நிமிடத்தில் மீண்டும் தாக்குதலை உருவாக்கிய நியூஸிலாந்து, அழகான அணிசார் நகர்வின் முடிவில் எலிஜா ஜஸ்ட் மின்னல் வேகத்தில் பந்தை ஈரான் வீரர்களுக்குப் போக்குக் காட்டி எடுத்துச் சென்று பிறகு பந்தை மீண்டும் பின்பக்கமாக சுவிஸ் வீரருக்கு அனுப்ப, அவர் மீண்டும் எலிஜா ஜஸ்டிற்குக் கொடுக்க, அவர் அதைச் சிறப்பாக இரண்டாவது கோலாக மாற்ற நியூஸிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

ஆனால், ஈரான் மீண்டும் போராடியது. ரெசாயியன் வலது பக்கத்திலிருந்து அனுப்பிய துல்லியமான கிராஸை முகமது மொகேபி தலையால் முடித்து கோலாக மாற்றினார்.

பந்து கம்பத்தில் பட்டது ஆனால் அதிர்ஷ்டவசமாக வலைக்குள் சென்றதால் ஈரான் மீண்டும் 2-2 என்ற சமநிலையை எட்டியது.

போட்டியின் இறுதிக்கட்டத்தில் இரு அணிகளுக்கும் வெற்றிக்கான கோலை அடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தாலும் அவற்றை பயன்படுத்த முடியவில்லை.

இறுதியில் கடுமையான போராட்டத்திற்கு பிறகு ஈரானும் நியூஸி லாந்தும் தலா ஒரு புள்ளியைப் பகிர்ந்து கொண்டன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *