டொராண்டோ:
பிஃபா உலகக் கோப்பை தொடரில் நேற்று கனடாவின் டொராண் டோ நகரில் உள்ள பிஎம்ஓ பீல்டு மைதானத்தில் ‘எல்’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கானா – பனாமா அணிகள் மோதின.
மழையின் இடையே நடந்த இந்த ஆட்டம் கடைசி நொடி வரை பரபரப்பாக அமைந்தது.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாக போராடினாலும் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்தில் பனாமா அணியின் செசிலியோ வாட்டர் மேன் அடித்த பந்தை கானா கோல்கீப்பர் லாரன்ஸ் அதி-ஜிகி திறம்பட தடுத்தார்.
முதல் பாதியின் இறுதியில் கானாவின் பிரதான கோல்கீப்பர் லாரன்ஸ் அதி-ஜிகி காயமடைந்தார்.
இதனால் 2-வது பாதியின் தொடக்கத்தில் பெஞ்சமின் ஆசரே பதிலீ கோல்கீப்பராக களம் புகுந்தார். அவர், பனாமாவின் ஆபத்தான கோல் முயற்சிகளை அற்புதமாக தடுத்து நிறுத்தினார்.
நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களின் முடிவில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. இதனால் ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட நேரத்தின் 5-வது நிமிடத்தில் கானாவின் பதிலி வீரர் பிரண்டன் தாமஸ்-அசாண்டே கொடுத்த நேர்த்தியான கிராஸை பெற்ற 20 வயதான கலெப் யிரென்கி மிக அழகாக கோலாக மாற்றினார்.
இது அவரது முதல் சர்வதேச கோலாகவும், கானாவின் வெற்றி கோலாகவும் அமைந்தது. முடிவில் கானா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.