சென்னை:
தமிழக முதல்வர் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதேபோல் தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய், தனது 52-வது பிறந்தநாளை இன்று (ஜூன் 22) கொண்டாடுகிறார்.
முதல்வராக பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால், தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாட தவெக தொண்டர்கள் திட்டமிட்டு, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இந்நிலையில், முதல்வர் விஜய்க்கு சமூக வலைதள பதிவு மூலம் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“தமிழக முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது நீண்ட ஆயுளுக்கும், ஆரோக்கியத்துக்கும் பிரார்த்திக்கிறேன்” என அதில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை இன்று (ஜூன் 22) காலை தொடங்கிய போது, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பிறந்தநாள் வாழ்த்துரை உடன் அவை நிகழ்வை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தொடங்கி வைத்தார்.
திமுக தலைவர் ஸ்டாலின், “முதல்வர் ஜோசப் விஜய்க்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்!
தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல் – உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்” என தனது சமூக வலைதள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “இந்த இனிய பிறந்தநாள் ஆண்டுதோறும் வெற்றிகரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் கொண்டாடப்பட்டு, நீங்கள் எடுக்கின்ற அரசியல் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறவும், எதிர்ப்புக்கள் தவிடு பொடியாகவும், தமிழ் நாட்டினுடைய மேன்மைக்காவும், உயர்வுக்காகவும், வழிகாட்டும் நல்லாட்சி நீங்கள் நடத்திடவும், முழுமையான உடல் நலனோடும், மன நிறைவோடும் பன்னூறு பிறை கண்டு வாழவும் இயற்கைத் தாயின் அருளைப் பிரார்த்திக்கிறேன்” என்று முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதல்வருமான விஜயின் 52-ஆம் பிறந்தநாளில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து, பொதுவாழ்க்கையில் மக்களுக்கு பணியாற்ற வாழ்த்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.