சென்னை:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை காலை உணவுக்கு பதிலாக பிஸ்கெட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டதாக செய்தி வெளியானது.
இதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்திருந்தார்.
பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுக்குப் பதில் பிஸ்கெட் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னையில் பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளிக்கல்வி அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. காலை உணவு, மதிய உணவு என்பது எல்லாம் வெறும் உணவு மட்டும் கிடையாது. அது ஓர் ஊட்டச்சத்து.
பிஸ்கெட் என்பது ஒரு துணை உணவு மட்டுமே. ஒருவேளை அந்த பள்ளியில் குறித்த நேரத்தில் உணவு ஏற்பாடு செய்ய முடியவில்லை என்றால் அதற்கு பதில் வேறொரு சமைத்த உணவைத்தான் கொடுக்க வேண்டும்.
அதற்கு மாறாக இதுபோன்று பிஸ்கெட் எல்லாம் கொடுக்கக் கூடாது. இதற்கு யார் காரணம் என்பது விசாரித்து முழு விவரம் தெரிந்து பிறகு எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது தெரிவிக்கப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அரசு பள்ளி வகுப்பறைக்குள் தமிழக முதல்வர் விஜய் படத்தை காண்பித்து தவெக நிர்வாகி மாணவர்களின் படிப்புக்கு இடையூறாக ஏற்படுத்திய நிகழ்வை ஏற்றுக்கொள்ள முடியாது.
எந்த ஒரு நலத்திட்ட உதவி என்றாலும் யாருக்கும் எந்தவித இடையூறு செய்யாமல் செய்ய வேண்டும்.
எனவே, பள்ளிகளில் வகுப்பு நேரத்தில் குழந்தைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது போன்ற செயல்களை கட்சியினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த விஷயத்தில், சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி குழந்தைகளுக்கு கட்சியினர் நலத்திட்ட உதவிகளை தாராளமாகச் செய்யலாம்.
ஆனால், யாருக்கும் இடையூறு செய்யாமல் அமைதியாக சென்று உதவிகளை வழங்கிவிட்டு அமைதியாக திரும்பிவிட வேண்டும். இல்லாவிட்டால் கட்சியினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.