சென்னை:
“மேகேதாட்டு அணை பிரச்சினை என்பது உச்ச நீதிமன்றத்தில் முடிவு செய்யப்படாத ஒரு புதிய பிரச்சினை.
இதற்கு நடுவர் மன்றத்தை நாடுவதுதான் சிறந்தது. மேகேதாட்டு தீர்மானத்தை விவாதப் பொருளாக்கினால், அது கர்நாடக அரசுக்கு சாதகமான சூழலை உருவாக்கிவிடும்.
எனவே, புதிய நடுவர் மன்றம் அமைப்பதை தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் இருந்து, ஒருமனதாக ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும்” என திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
இதுகுறித்து சட்டப்பேரவை வளாகத்தில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, “மேகேதாட்டு பிரச்சினை குறித்து சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், அதிமுக மற்றும் இடதுசாரிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளன.
இந்த விவகாரத்தில் திமுக முன்மொழிந்த திருத்தத்தை ஏற்றுக்கொண்டு, தமிழக அரசு தான் கொண்டுவந்த தீர்மானத்தில் அதனை சேர்த்துக்கொண்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய நீர்வள ஆணையம், சில நிபந்தனைகளோடு விரிவான திட்ட அறிக்கை ஒன்றை தயாரிக்க 28-11-2018 தேதியிட்ட கடிதத்தில் கர்நாடக அரசுக்கு ஒரு அறிவுரை யினை வழங்கியிருந்தார்கள்.
அந்த அறிவுரையை எதிர்த்து, அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக, தமிழக அரசின் சார்பில் வழக்கு தொடுத்தார்கள்.
இதனையொட்டி 2025-ம் ஆண்டு நவம்பர் 13-ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மத்திய நீர்வள ஆணையம் சில நிபந்தனைகளோடு தான் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டி, அதன் அடிப்படையில் தமிழக அரசின் கோரிக்கையை அப்போதைய நிலையின் அடிப்படையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வது ஆரம்ப நிலையிலானதாக இருக்கும் என உச்ச நீதிமன்றம் தனது கருத்தை தெரிவித்தது.
அதுமட்டுமின்றி, தமிழக அரசின் ஆட்சேபனைகள் உள்ளிட்ட மூன்று முக்கிய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாமல், தொடர்ந்து கர்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட் டால், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடரலாம் என்று அனுமதி அளித்துள்ளது.
மேகேதாட்டு அணை கட்டக் கூடாது என பலமுறை நம் சட்டப்பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம்.
இதுகுறித்து பல்வேறு காலகட்டத்தில் பொறுப்பில் இருந்த பிரதமர்களை, ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து நம் தரப்பின் வாதங்களை முறையிட்டுள்ளோம்.
பல அனைத்துக் கட்சி கூட்டங்களையும் கூட்டி மேகேதாட்டு அணை கட்ட எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம்.
கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், காவிரி இறுதி தீர்ப்புக்கு எதிராக நாங்கள் மேகேதாட்டு அணையை கட்டுவோம் என பிடிவாதமாக, அந்த செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கர்நாடக அரசின் இந்த செயல் தமிழக விவசாயிகளுக்கு பேராபத்தாக முடியும்.
இந்த பிரச்சினையை கவனமாக கையாள தவறினால், மீண்டும் இப்பிரச்சினை மத்திய நீர்வளத் துறை அதிகாரிகளின் வசம், அவர்களின் முடிவுக்கு செல்லக்கூடிய வகையில் அமைந்து, தமிழகம் ஒரு கிடுக்குப்பிடியில் சிக்கிக்கொள்ளும் சூழல் உருவாகும்.
மேகேதாட்டு அணை பிரச்சினை என்பது உச்ச நீதிமன்றத்தில் முடிவு செய்யப்படாத ஒரு புதிய பிரச்சினை.
பல மாநிலங்களுக்கு இடையே இருக்கும் நதிநீர் தாவா படி, உச்ச நீதிமன்றத்தாலே பரிந்துரைக்கப்பட்ட 3 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அல்லது உயர் நீதிமன்ற நீதிபதிகள் தலைமையிலான நடுவர் மன்றத்தை நாடுவதுதான் சிறந்தது என்று இந்த வழக்கில் தொடர்ந்து வாதாடி வரும் சட்ட வல்லுநர்கள் நமக்கு தெரிவித்துள்ளனர்.
எனவே மூத்த வழக்கறிஞர்கள், துறை வல்லுநர்கள் ஆலோசனையின் படி, மேகேதாட்டு அணை புதிய பிரச்சினை என்ற அடிப்படையில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த மார்ச் 4-ம் தேதி ஒன்றிய அரசுக்கு வைத்துள்ளோம்.
இந்த நடுவர் மன்றம் அமைக்கப்படும் சூழலில், ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் இறுதி செய்த காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு வராது.
புதிய நடுவர் மன்றம் அமைக்கும் கோரிக்கை என்பது திமுக ஆட்சியில் எடுக்கப்பட்டிருந்தாலும், அது அடிப்படையில் தமிழக அரசின் முடிவு.
தமிழக மக்கள், விவசாயிகளின் நலனை, காவிரி உரிமையை பாதுகாக்க எடுக்கப்பட்ட ஆக்கப்பூர்வமான முடிவு இது.
இந்த நடுவர் மன்றம் அமைப்பதால், 2018 ஆம் ஆண்டு பிப்.16-ம் தேதி வழங்கப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எந்தவித பாதிப்பும் வராது. அந்த தீர்ப்பை எந்த விதத்திலும் மீண்டும் திறக்க இயலாது.
ஏற்கெனவே 2018-ல் கர்நாடக அரசு பெண்ணையாற்றின் குறுக்கே அணைகட்ட முயற்சித்தபோது, அப்போதைய அதிமுக அரசு ஒரு வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், ஒரு நடுவர் மன்றத்தை நியமிக்க மத்திய அரசை அணுக அனுமதி அளித்தது.
அதன் விளைவாக 2019-ல் பெண்ணையாற்றில் அணைகட்டுவதை தடுக்க நடுவர் மன்றம் அமைக்க அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேகேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்தில், நாங்கள் கொண்டுவந்த திருத்ததை ஏற்றுக்கொண்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் விவசாயிகள் நலனை காக்கும் ஒரு முயற்சி.
இதனை மீண்டும் விவாதப் பொருளாக்கினால், மேகேதாட்டு தீர்மானத்தின் மீது நாம் காட்டிய ஒற்றுமை உணர்வை பாதிப்பதாக அமைப்பும்.
மேலும், இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகளிடையே பிளவு என தோற்றத்தை உருவாக்கி, அதை அரசியல் ஆக்குவதைப் போல அமைந்துவிடும். இது கர்நாடக அரசுக்கு சாதகமான சூழலை உருவாக்கிவிடும்.
எனவே தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் இருந்து, ஒருமனதாக இதனை ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும்.” என்றார்.