சென்னை:
தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்தன.
அதனை தொடர்ந்து மார்ச் 24-ந் தேதி முதல் துறை ரீதியான மானியக்கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. அமைச்சர்கள் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.
ஏப்ரல் 30-ந் தேதி வரை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது, ஒரு நாள் முன்பாக அதாவது, ஏப்ரல் 29-ந் தேதியுடன் சட்டசபை கூட்டம் நிறைவு பெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பை சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு வெளியிட்டார்.
29-ந் தேதி காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசுகிறார். துறை ரீதியான அறிவிப்புகளையும் அவர் வெளியிட இருக்கிறார்.