சென்னை:
மலையாள நடிகர்கள் சங்க (அம்மா) நிர்வாகிகள் தேர்தல் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இதில் தலைவராக நடிகை ஸ்வேதா மேனன், பொதுச் செயலாளராக நடிகை குக்கு பரமேஸ்வரன், துணைத் தலைவராக லட்சுமி பிரியா, இணைச் செயலாளராக அன்சிபா ஹாசன் உள்பட 17 நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மலையாள நடிகர்கள் சங்கத்துக்கு ஒரு பெண் தலைவரானது இதுவே முதல் முறை.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தன்னை நடிகர் டினி டோம், ஜிகாதி என்று அழைத்ததாக அன்சிபா ஹசன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக லட்சுமி பிரியா மீதும், டினி டோம் மீதும் அவர் கொச்சி போலீஸில் புகார் செய்தார்.
இந்தப் பிரச்சினைக்கு இடையில் நடிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் கொச்சியில் நடைபெற்றது.
முன்னாள் தலைவரான மோகன்லால் பொதுக்குழு கூட்டத்தை தொடங்கி வைத்தார். பொதுச்செயலாளர் குக்கு பரமேஸ்வரன் வரவு- செலவு கணக்கை தாக்கல் செய்தார்.
ஆனால் அந்தக் கணக்கை அங்கீகரிக்க முடியாது என்று கூறி நடிகர்கள் சித்திக், பாபுராஜ், இடைவேளை பாபு ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து தலைவர் ஸ்வேதா மேனன் உள்பட 17 நிர்வாகிகளும் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். ஸ்வேதா மேனன் தனது அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். தொடர்ந்து நடிகர்கள் சங்கத்தை நிர்வகிக்க தற்காலிக கமிட்டி அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
பின்னர் ரமேஷ் பிஷாரடி எம்.எல்.ஏ தலைமையில் தற்காலிக கமிட்டி அமைக்கப்பட்டது.
ஒட்டுமொத்த நிர்வாகக் குழுவும் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்திருப்பது மலையாளத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்வேதா மேனன், சங்கம் தவறான நபர்களின் கைகளுக்குச் செல்வதாகக் குற்றம்சாட்டினார்.
அவர் கூறும்போது, ”முன்கூட்டியே சில உள்நோக்கங்களுடன் என்னை இந்த அமைப்பில் இருந்து வெளியேற்றச் சதி நடந்தது.
பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சிலரின் கைப்பாவையாக இருக்க எனக்கு விருப்பமில்லை.
எனது மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசும் ஆளுமை எனக்கு இருக்கிறது. இந்தச் சங்கம் தற்போது குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களின் கைகளுக்குச் சென்று கொண்டிருக்கிறது.
சங்கத்தின் தற்போதைய நெருக்கடிக்கு, நிர்வாகக் குழுவின் பொருளாளர் உன்னி சிவபால் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் தலைமறைவானதே காரணம்.
கடந்த மே 1ம் தேதி, எந்த முன்னறிவிப்போ அல்லது தகவலோ இன்றி அவர் காணாமல் போனது பெரும் சிக்கல்களை உருவாக்கியது.
முந்தைய நிர்வாகக் கமிட்டியில் பாபு ராஜ் செய்த பல காரியங்களில் பெரும் குளறுபடிகள் உள்ளன.
பெண்களின் தலைமைக்குச் சவால் விடும் சூழல் உருவாகியுள்ளது. இதுபோன்ற ஆதிக்க மனப் பான்மையுடனான அமைப்பில் தொடர்வதில் அர்த்தமில்லை” என்றார்.