கொல்கத்தா:
கட்சி விரோத நடவடிக்கை காரணமாக திரிணமூல் காங்கிரஸின் 8 மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.
மேற்கு வங்க தேர்தல் தோல்விக்கு பிறகு திரிணமூல் தலைவர் மம்தா பானர்ஜிக்கு எதிராக கட்சியின் மூத்த தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.
திரிணமூலின் 28 எம்பிக்களில் 20 பேர் கட்சியில் இருந்து விலகி என்சிபிஐ கட்சியில் இணைந்து உள்ளனர். அவர்கள் பகிரங்கமாக பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
இதனிடையே திரிணமூல் காங்கிரஸின் 80 எம்எல்ஏக்களில் சுமார் 60 எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்படுகின்றனர்.
ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள் திரிணமூலின் பெயர், சின்னத்துக்கு உரிமை கோரி வருகின்றனர்.
இந்த சூழலில் ரிதப்ரதா தலைமையிலான அதிருப்தி திரிணமூல் தலைவர்கள் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர்.
இதில் கட்சித் தலைவர் பதவியில் இருந்து மம்தா பானர்ஜி நீக்கப்பட்டார். திரிணமூல் காங்கிரஸின் புதிய தலைவராக அருப் ராய் தேர்வு செய்யப்பட்டார். முக்கிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து கட்சிவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி திரிணமூல் மூத்த தலைவர்கள் ஜாவித் அகமது கான், அருப் ராய், ரதின் கோஸ், பிப்லப் மித்ரா, சபீனா யாஸ்மின், அருப் பிஸ்வாஸ், சென்ஹாசிஸ் சக்கரவர்த்தி உள்ளிட்ட 8 பேரை மம்தா பானர்ஜி நேற்று கட்சியில் இருந்து நீக்கினார். அவர்களின் பதவிகள், பொறுப்புகளும் பறிக்கப்பட்டன.
மம்தா தலைமையிலான திரிணமூலின் தேசிய செயற்குழு முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. புதிய நிர்வாகிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியல் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது.
இதேபோல அதிருப்தி அணியினரும் தங்களது நிர்வாகிகள் பட்டியலை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளனர்.